ஆண்டவரே! என் உயிர் உம்மீது தாகம் கொண்டுள்ளது
திருப்பாடல் 63: 1, 2 – 3, 4 – 5, 7 – 8
இந்த உலகத்தில் தாகம் எடுக்காதவர்கள் என யாருமே இருக்க முடியாது. இந்த உடலுக்கு தண்ணீர் தேவை. ஏனென்றால், நம்முடைய உடல் பஞ்சபூதங்களால் இணைந்த ஒன்று. இந்த உடல் தண்ணீராலும் நிரப்பப்பட்டிருக்கிறது. தண்ணீர் அருந்துகிறபோது, நம்முடைய தாகம் தணிகிறது. இந்த தாகம் என்பதை நாம் பல வழிகளில் அறிந்து கொள்ளலாம். அதிகார தாகம், செல்வம் சேர்க்கக்கூடிய தாகம், முதல் இடம் பெற வேண்டும் என்கிற தாகம் என்று, இந்த பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. இப்போது நாம் பார்த்த தாகமெல்லாம், இந்த உலகம் சார்ந்த தாகம். இன்றைய திருப்பாடலில் இந்த உலகம் சார்ந்த தாகம் குறிப்பிடப்படவில்லை. மாறாக, ஆன்மா சார்ந்த தாகம் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
திருப்பாடல் ஆசிரியரின் தாகம், இந்த உலகம் சார்ந்த தாகமாக இருக்கவில்லை. அவருடைய தாகம் இறையனுபவத்தைப் பெறுவதற்கான தாகமாக இருக்கிறது. இது உயர பறக்க வேண்டும் என்று எண்ணக்கூடிய ஓர் ஆன்மாவின் தாகம். இந்த உலகத்தில் மனித சமூகம் பெற்றிருக்கிற எல்லாவிதமான கொடைகளுக்கும் நன்றி செலுத்தும்விதமான தாகம். பல்வேறு சோதனைகளிலிருந்து, ஆபத்துக்களிலிருந்து அற்புதமாக காப்பாற்றப்பட்டு, இறையனுபவத்தால் ஆட்கொள்ளப்பட்ட அனுபவத்தால் ஏற்பட்ட தாகம். இனி இந்த உலகத்தில் எதுவும் தேவையில்லை, என்று முற்றிலும் துறந்த ஒரு துறவியின் தாகம்.
இந்த தாகத்தை நாம் ஒவ்வொருவரும் கொண்டிருக்க வேண்டும் என்பதுதான் ஆசிரியர் சொல்ல வருகிற, சொல்ல விரும்புகிற கருத்தாக இருக்கிறது. இந்த உலகம் சார்ந்த தாகத்தை தணிப்பதற்கு நாம் எடுக்கக்கூடிய முயற்சிகளை விட்டுவிட்டு, கடவுள் சார்ந்த நம்முடைய ஆன்மாவின் தாகத்தை தணிக்க முயற்சி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்