ஆண்டவரே என் ஆயர்
திருப்பாடல் 23: 1 – 3, 3 – 4, 5, 6
தாவீது அரசரின் திருப்பாடல்கள் பொதுவாக, வேண்டுதலாகவும், வருத்தத்தை, துயரத்தை வெளிப்படுத்தும் புலம்பலாகவும் இருப்பதை நாம் பார்க்கலாம். ஆனால், இந்த திருப்பாடல் அதிலிருந்து சற்று மாறுபட்டது. கடவுள் செய்த நன்மையான செயல்களை நன்றியுணர்வோடு நினைவுகூறக்கூடிய பாடலாக இது அமைந்திருக்கிறது. இறைவனை ஆடுகளைப் பராமரிக்கும் ஆயரோடு ஒப்பிடுகிறார். கடவுள் அவருக்கு செய்த எல்லா நன்மையான செயல்களையும் நினைவுகூர்கிறார்.
தாவீது அரசர் ஓர் இடையராக வாழ்ந்தவர். தன்னுடைய அனுபவத்தைத்தான் இங்கே பாடலாக வடிக்கிறார். ஓர் ஆயராக இருந்து ஆடுகளைப் பராமரிப்பது, அந்த ஆடுகளுடன் அவர் கொண்டிருந்த அன்பு, அவை காணாமல் போனால், பதைபதைப்போடு அதை தேடுவது என, ஆயரின் ஒவ்வொரு நிலையையும் அவர் இங்கே பகிர்ந்து கொள்கிறார். ஆடுகள் மேல் தான் கொண்டிருந்த அன்பை விட, கடவுள் பல மடங்கு அன்பை, மக்கள் மீது வெளிப்படுத்துவதாக இங்கே சொல்லப்படுகிறது. அதுதான் கடவுளின் அன்பு. எல்லா நேரங்களிலும் குறிப்பாக, நெருக்கடி நேரங்களிலும் பதைபதைப்போடு ஓர் ஆயர் ஆடுகளைப் பேணிப்பராமரிப்பது போல, கடவுளும் நம்மைப் பராமரித்துக் கொண்டிருக்கிறார்.
கடவுள் எப்போதும் தன் பார்வையை நம் மீது வைத்திருக்கிறார். ஒரு போதும் அவர் தன் கண் பார்வையிலிருந்து நம்மை அகலவிடமாட்டார். அவர் நம்மீது முழுமையான அன்பு கொண்டிருப்பது இதிலிருந்து வெளிப்படுகிறது. அந்த அன்பை நமது வாழ்வில் முழுமையாக சுவைத்து, அந்த அன்பில் இன்புற்று இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்