ஆண்டவரே! உம் வார்த்தைகள் வாழ்வுதரும் ஆவியைக் கொடுக்கின்றன
கடவுளுடைய வார்த்தை உயிருள்ளது என்று எபிரேயருக்கு எழுதிய திருமுகத்தில் சொல்லப்படுகிறது. இது வெறும் உதட்டளவில் வெளிப்படக்கூடிய வார்த்தை அல்ல. அனுபவித்து அறிந்து வெளிப்படுத்துகின்ற வார்த்தைகள். எகிப்திலிருந்து இஸ்ரயேல் மக்களை இறைவன் ஆரோன், மோசே வழியாக வழிநடத்தினார். அவர்கள் சீனாய் வனாந்திரத்தில் புகலிடம் பெற்றனர். அது ஒரு வறண்ட பாலைநிலம். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை கரிசல்காடு. இவ்வளவு மக்களை வழிநடத்த வேண்டுமென்றால், அவர்களை அமைதியாக இருக்க வைக்க வேண்டுமென்றால், ஒழுங்குமுறைகள் கொடுக்கப்பட வேண்டும். அதைத்தான் சீனாய் மலையில் மோசே வழியாக, மக்களுக்கு வழங்கினார்.
இந்த ஒழுங்குமுறைகளை எதிர்மறையாகப் பார்த்தால், ஏதோ நம்மை கட்டுக்குள் வைக்கக்கூடிய சட்டங்கள் போல தோன்றும். ஆனால், அவற்றை நேர்மறையாகச் சிந்தித்தால், அது நமது வாழ்வை செதுக்கக்கூடியவைகளாகத் தோன்றும். நம் அனைவரையும் வாழ வைக்கக்கூடியதாக தோன்றும். ஆக, கடவுளின் வார்த்தைகள் எந்த அளவுக்கு வல்லமையுள்ளதாக இருக்கிறது. அதை எப்படி நமது வாழ்வில் நாம் எதிர்கொள்ள வேண்டும். அதனை எப்படி அனுபவிக்க வேண்டும் என்று, ஆசிரியர் சொல்கிறார். இறைவார்த்தையை வெறும் வார்த்தையாக உதாசீனப்படுத்தாமல், அதனை உண்மையான மனநிலையோடு, திறந்த மனநிலையோடு அழைக்க வேண்டுமென்று, ஆசிரியர் நமக்கு அழைப்புவிடுக்கிறார்.
வாழ்வு தரக்கூடிய அந்த இறைவார்த்தையின் மீது நமது முழுமையான நம்பிக்கையை வைப்போம். அந்த இறைவார்த்தை நமது வாழ்வை நிச்சயமாக மாற்றும். அதற்கான அருளைப்பெற, இந்த திருப்பாடலை நாமும் பாடி, இறைவனின் வார்த்தைகளை, திறந்த உள்ளத்தோடு ஏற்றுக்கொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்