ஆண்டவரே! உம் உறைவிடம் எத்துணை அருமையானது
திருப்பாடல் 84: 2, 3, 4 – 5, 7 & 10
இறைவன் வசிக்கக்கூடிய ஆலயம் எத்துணை மகிமையானது என்பதை இந்த திருப்பாடல் விளக்குவதாக இருக்கிறது. ”அருமையானது” என்கிற பொருள், ஆலயத்தின் உயர்ந்த மண்டபங்களையும், சுரூப வேலைப்பாடுகளையும் குறிக்கக்கூடிய வார்த்தையல்ல. ஆலயத்தின் சிறப்புத்தோற்றத்தையும் குறிப்பதல்ல. இங்கே நாம் கவனிக்கக்கூடிய முக்கியமான ஒன்று, திருப்பாடல் ஆசிரியர் எருசலேம் தேவாலயத்தை மையமாக வைத்து இந்த பாடலை எழுதுகிறார். எருசலேம் தேவாலயம் பார்ப்பதற்கு அழகானது. பரவசம் தரக்கூடியது. அப்படியானால், ஆசிரியர் ஆலயத்தைப்பார்த்து, “அருமையானது“ என்று சொல்லக்கூடிய பிண்ணனி என்ன? என்பதை இப்போது பார்ப்போம்.
ஆலயம் என்பது ஆண்டவர் வாழக்கூடிய இல்லம். ஆண்டவரின் ஆலயத்தில் இருக்கிறபோது, நமக்கு எந்த கவலையும் எழுவது கிடையாது. ஒரு தாயின் மடி எப்படி நம்முடைய கவலைகளுக்கெல்லாம் சிறந்த மருந்தாக இருக்கிறதோ, அதேபோல இறைவனின் இல்லம் நம் அனைவருக்கும் சிறந்த மருந்தாக இருக்கிறது. நம்முடைய கவலைகளைப் போக்கக்கூடிய இடமாகவும், கண்ணீரைத்துடைக்கக் கூடிய இடமாகவும் இருக்கிறது. எவ்வளவு துயரத்தோடு இறைவனின் ஆலயத்திற்கு வந்தாலும், நாம் கவலை நீங்கிச் செல்வதற்கு இறைவனின் ஆலயம் துணைசெய்கிறது. ஏனென்றால், அங்கே இருப்பது உண்மையின் ஆண்டவர். நமக்கெல்லாம் வாழ்வு தரக்கூடியவர். நம் கண்ணீரைத்துடைக்கக் கூடியவர். இந்த காரணத்தினால் தான், ஆசிரியர் ஆண்டவரின் ஆலயத்தை உயர்வானதாகச் சொல்கிறார்.
நம்முடைய வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாக ஆலயம் அமைந்திருக்கிறது. அது நம்முடைய வெறும் வழிபாட்டுத்தலம் மட்டுமல்ல, அதனையும் தாண்டிய இறையனுபவத்தைக் கொடுக்கக்கூடிய இடம். அந்த இறையனுபவத்தைப் பெற்றுக்கொள்ளக் கூடிய இடமாக நாம் ஆலயத்தைப் பார்ப்போம். அதன் புனிதத்தன்மையை உணர்வோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்