ஆண்டவரே! உம்மிடம் நான் அன்பு கூறுகின்றேன்
கடவுளிடம் திருப்பாடல் ஆசிரியர் சிறப்பான விதத்தில் அன்பு கூர்வதாக சொல்கிறார். கடவுளிடம் அன்பு கொள்வதன் காரணம் என்ன? ஒரு மனிதரிடத்தில் அன்பு கொள்வதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அந்த மனிதரிடத்தில் இருக்கிற ஏதாவது ஒரு பண்பு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதரின் அழகு நமக்கு பிடித்திருக்கலாம். அந்த மனிதர் நம்மீது காட்டுகிற தனிப்பட்ட அன்பு நம்மை கவர்ந்திருக்கலாம். திருப்பாடல் ஆசிரியரின் அன்புக்கு காரணம் என்ன?
ஆண்டவர் தன் மீது காட்டக்கூடிய அன்பை பலவிதமான உருவகங்களால் அவர் உணர்த்துகிறார். கடவுளை மலையாக, கோட்டையாக, மீட்பராக, கேடயமாக பார்க்கிறார். இவை அனைத்துமே பாதுகாப்பிற்கு பெயர் போனவை. மலை பாதுகாப்பானதாக இருக்கிறது. கேடயம் நம்மைப் பாதுகாக்கிறது. கோட்டை எதிரிகளிடமிருந்து மக்களைக் காப்பாற்றுகிறது. கற்பாறை உறுதியானதாக, பாதுகாப்பானதாக இருக்கிறது. ஆக, கடவுள் அவரை பாதுகாக்கிறவராக இருப்பதால், கடவுளை அன்பு செய்வதாக சொல்கிறார். கடவுள் அவரைப் பாதுகாக்கிறார் என்றால், கடவுள் அவரை அன்பு செய்கிறார் என்பது அர்த்தம். அந்த அன்பை இங்கே பாடலாக வெளிப்படுத்துகிறார்.
நம்முடைய வாழ்வில் நமக்கு கேடயமாக, பாதுகாப்பாக இருக்கும் கடவுளிடம் நாம் எப்போதும் அன்பு நிறைந்தவர்களாக வாழ்வோம். கடவுளின் அன்பை நாமும் உணர்ந்து, அந்த அன்பை கடவுளோடு பகிர்ந்து கொள்ளக்கூடியவர்களாக வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்