ஆண்டவரே! உமது வழியை எனக்குக் கற்பியும்

திருப்பாடல் 86: 1 – 2, 3 – 4, 5 – 6, 11a

இந்த திருப்பாடல் “தாவீதீன் செபம்” என்று சொல்லப்படுகிறது. இது ஏதோ குறிப்பிட்ட நிகழ்வை மையமாக வைத்து எழுதப்பட்ட திருப்பாடல் அல்ல. மாறாக, அன்றாட வாழ்க்கையில் தாவீது கடவுளோடு பேசக்கூடிய வார்த்தையாக இது நம்பப்படுகிறது. கடவுளின் தயவு, வழிகாட்டுதல், செய்யக்கூடிய எல்லாக்காரியங்களிலும் கிடைக்க வேண்டி பாடப்பட்ட, விண்ணப்பப்பாடல் தான், இந்த திருப்பாடல். இந்த திருப்பாடலை நாம் தியானிக்கிறபோது, வெறும் உதடுகளால் மட்டும் வார்த்தைகளைச் சொல்லாமல், உள்ளத்தோடு இணைந்து, கடவுளிடத்தில் வேண்டுதலை எழுப்ப வேண்டும்.

ஒவ்வொருநாளும் நமது வாழ்க்கையில் புதிய நாளைத் தொடங்குகிறபோது, கடவுளிடம் இந்த திருப்பாடலைச் செபித்து, அவருடைய வழிநடத்துதலைக் கேட்கலாம். ஒவ்வொருநாளும் பல முடிவுகளை நமது வாழ்க்கையில் நாம் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். படிக்கிற மாணவர்கள் முதல் வீட்டில் இருக்கிற பெரியவர்கள் வரை, ஒவ்வொருவரும் முடிவு எடுக்கக்கூடிய நிலையில் இருக்கிறார். அந்த முடிவுகளை எடுப்பதற்கு நமக்கு கடவுளின் வழிகாட்டுதல் நிச்சயம் தேவைப்படும். ஏனென்றால், நாம் எடுக்கிற தவறான முடிவுகள் நமது வாழ்வில் பல சிக்கல்களை நமக்கு உருவாக்கிவிடும். இப்படியான சிக்கல்களைத் தவிர்ப்பதற்கு, நாம் சரியான முடிவுகள் எடுப்பது அவசியமான ஒன்றாக இருக்கிறது. அதற்கு கடவுளின் வழிநடத்துதல் நமக்கு தேவை. அதற்காக நாம் இறைவனிடம் மன்றாடுவோம். அவர் நம்மை வழிநடத்த ஒவ்வொநாளும் நாம் இந்த திருப்பாடலைச் செபிப்போம்.

நமது வாழ்க்கையில் ஒவ்வொரு கணமும் நாம் இறைவனோடு இணைந்திருக்க வேண்டும். அவரை விட்டு விலகிச்சென்றுவிடக்கூடாது. அதற்கு, செபம் நமக்கு பேருதவியாக இருக்கும். ஒவ்வொருநாளும் இந்த திருப்பாடலைச் செபித்து, கடவுளோடு இணைந்திருந்து, அவருடைய வழிகாட்டுதலில், சரியான வழியில் நடப்போம்.

அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்

You may also like...

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.