ஆண்டவரே! உமது வல்லமையில் அரசர் பூரிப்படைகிறார்
திருப்பாடல் 21: 1 – 2, 3 – 4, 5 – 6
பூரிப்பு என்பது உடல்,உள்ளம், ஆன்மா அனைத்தின் நிறைவிலிருந்தும் வருவது ஆகும். திருமணமான ஒரு பெண்ணின் ஏக்கம் எப்போது தான் தாயாக மாறக்கூடிய பாக்கியம் கிடைக்கும் என்பதுதான். அந்த நிகழ்வு நடக்கிற நேரத்தில், அவர் பூரிப்படைகிறார். ஆனந்தம் கொள்கிறார். ஏனென்றால், இதற்காகத்தான் அவர் காத்துக்கொண்டிருந்தார். ஆக, குழந்தை அந்த தாயின் பூரிப்பிற்கு காரணமாகிறது. இங்கே திருப்பாடல் ஆசிரியர் இறைவனின் வல்லமையில் பூரிப்படைகிறார்.
இறைவனின் வல்லமை என்ன? நடக்க முடியாது என்று நினைக்கிறவற்றை நடத்திக்காட்டுவதும், அற்புதமான முறையில் இஸ்ரயேல் மக்களுக்கு வெற்றியைக் கொடுப்பதும் இறைவனின் வல்லமை. இஸ்ரயேலின் அரசர் பூரிப்படைவதற்கு காரணம், எதிர்பார்க்காத வெற்றிகளை ஆண்டவர் கொடுத்திருக்கிறார். வேற்று நாட்டினர் நடுவில் மதிப்பையும், மரியாதையையும் கொடுத்தவர் ஆண்டவர். யாரும் பெற முடியாத அடையாளத்தையும் வழங்கியிருக்கிறார். அடையாளம் இல்லாத மக்களுக்கு, முகவரியில்லாத அனாதைகளுக்கு தன்னுடைய வல்லமையினால் மகிழ்ச்சி தந்திருக்கிறார். இதுதான் அரசரின் பூரிப்பிற்கு காரணம். தானே வேற்றுநாட்டினருக்கு எதிராக பல வெற்றிகளைப் பெற்றிருந்தாலும், இந்த மகிழ்ச்சி அவருக்கு கிடைத்திருக்காது. மாறாக, ஆண்டவர் அவர் பக்கத்தில் இருந்து அவருக்கு இந்த வெற்றியைக் கொடுத்தது அவருக்கு மிகுந்த பூரிப்பைக் கொடுத்திருக்கிறது.
மகிழ்ச்சியைக் கொடுக்கக்கூடியவர் இறைவன் ஒருவர் தான். அந்த மகிழ்ச்சி நிலைத்து நிற்பதற்கு காரணமும் இறைவன் தான். இறைவனில் நாம் முழுமையான நம்பிக்கை வைத்தால், நிச்சயம் நம்மால் எப்போதும் பூரிப்பாக இருக்க முடியும். அப்படிப்பட்ட நிறைவான வாழ்க்கையை நாம் ஆண்டவரிடம் கேட்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்