ஆண்டவரே! உமது பேரன்பை எங்களுக்குக் காட்டியருளும்
திருப்பாடல் 85: 7, 9, 10 – 11, 12 – 13
இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்கள். பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டு, அங்கிருந்த திரும்பி வந்த நிலையில் எழுதப்படுவதாக, விவிலிய அறிஞர்கள் நம்புகிறார்கள். கடவுளுக்கு எதிராக இஸ்ரயேல் மக்கள் செய்த பாவங்களுக்கு, பாபிலோன் சிறைவாசம் கடவுளின் தண்டனையாக அமைந்தது. கடவுளுக்கு எதிராக பாவம் செய்ததும், கடவுளின் குரலுக்கு செவிகொடுக்காமல் புறக்கணித்ததும் இந்த தண்டனைக்கான காரணங்கள். பாபிலோனில் இஸ்ரயேல் மக்கள் சந்தித்த கொடூரங்கள், கொடுமைகள் நிச்சயம் கடவுளின் அன்பை அவர்கள் உணர்ந்து கொள்வதற்கான வாய்ப்பாக இருந்திருக்கிறது, என்பதை இந்த திருப்பாடலின் வரிகள் நமக்கு உணர்த்துகிறது.
புதிய விடியலை, புதிய வாழ்வை எதிர்நோக்கியிருக்கக்கூடிய இஸ்ரயேல் மக்கள், தங்களின் கடந்த கால கசப்பு வாழ்வை மறந்து, இனியாவது கடவுளின் மீது நம்பிக்கை வைத்து, தங்களது வாழ்வை வாழ. இது அழைப்புவிடுக்கிறது. கடவுளின் கோபம் தங்கள் மீது முழுமையாக தணிந்துவிட்டதா? இல்லையா? என்ற சந்தேகம் அவர்களுக்கு இன்னும் தீர்ந்தபாடில்லை. அந்த ஒரு சந்தேகத்தோடு தான், இழந்துபோன கடவுளின் அன்பைப்பெற வேண்டும் என்கிற வேகத்தோடு, இந்த பாடல் பாடப்படுகிறது. இனிவரக்கூடிய நாட்களில், கடவுளின் குரலுக்கு கீழ்ப்படிந்து நடக்கிற உறுதியையும், அவரது வார்த்தைகளை மதித்து வாழும் மனதையும் மக்கள் பெற்றுக்கொள்ள அழைப்புவிடுக்கிறது.
கடவுள் நம்மோடு இருக்கிறவரை தான் நமக்கு பாதுகாப்பு. கடவுள் என்றும் நம்மை அரவணைக்கக்கூடியவராக இருக்கிறார். அவரது வழிநடத்துதலை நாம் ஏற்று, அவரது குரலுக்கு பணிந்து வாழக்கூடிய அருள்வேண்டி, இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்