ஆண்டவரே! உமது பெயர் உலகெங்கும் மேன்மையாய் விளங்குகின்றது
திருப்பாடல் 8: 3 – 4, 5 – 6, 7 – 8
கடவுளின் மாட்சிமையையும், சிறப்பையும், மாண்பையும் எடுத்துக்கூறக்கூடிய பாடல் தான் இந்த திருப்பாடல். கடவுளின் பெயர் இந்த உலகம் முழுமையும் மேன்மையாய் விளங்குகின்றது. எப்படி? கடவுளின் படைப்பு, அவரின் மேன்மையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. இந்த உலகத்தில் இருக்கிற படைப்பு ஒவ்வொன்றுமே ஆச்சரியமூட்டக்கூடியது. அவ்வளவு மகிமையான படைப்புக்களை கடவுள் படைத்திருக்கிறார். எங்கு நோக்கினும் கடவுளின் படைப்பு தான், நம் கண்களுக்கு வியப்பாய் இருக்கிறது. அதைத்தான் திருப்பாடல் ஆசிரியர் நமக்கு வியப்பாக எடுத்துக்கூறுகிறார்.
கடவுளின் படைப்பு மட்டுமல்ல, இந்த படைப்பு முழுவதையும் மீட்டெடுக்க நம் ஆண்டவர் வகுத்த மீட்புத்திட்டமும் வியப்புக்குரியவை. அந்த மீட்பை எடுத்துரைப்பதற்காக, கடவுளின் மக்களை கொஞ்சம், கொஞ்சமாக பக்குவப்படுத்துகிற இயேசுவின் உறுதியான முயற்சி இன்றைய நற்செய்தியில் வெளிப்படுகிறது. கடவுளின் அன்பும், இரக்கமும் தான், மக்களை மீட்புப்பாதையில் கொண்டு செல்ல உதவும் என்பதையும், வெறும் சட்டங்களை வைத்து, நாம் ஒன்றும் செய்ய முடியாது என்பதை, இன்றைய நிகழ்ச்சி வாயிலாக இயேசு அறிவிக்கிறார். வெறும் சட்டங்கள் கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்திவிடாது. அதையும் கடந்து, அன்பும், நேசமும் தான் கடவுளின்பால் அனைவரையும் ஈர்க்கக்கூடியதாக இருக்கும்.
கடவுளின் மாட்சிமையை இந்த உலகம் எடுத்துரைத்துக் கொண்டிருக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய நாமும், இயற்கையோடு இணைந்து, ஆண்டவர் செய்கிற வல்ல செயல்களை கண்டுணர்ந்து வாழ, இந்த நாளில் நாம் உறுதி எடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்