ஆண்டவரே இரக்கமாயிரும்
திருப்பாடல் 51: 3 – 4, 5 – 6, 12 – 13, 14 & 17
கடவுளுடைய இரக்கத்திற்காக திருப்பாடல் ஆசிரியர் இறைவனிடம் கெஞ்சி மன்றாடுகிறார். இந்த திருப்பாடலின் பிண்ணனி அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். பத்சேபாவுடனான தன்னுடைய தவறான செயல், இறைவாக்கினர் வழியாக உணர்த்தப்பட்டபோது, தாவீது உள்ளம் நொந்து வேதனையில், தன்னுடைய பாவக்கறைகளை மன்னிப்பதற்காக உருகிய பாடல் தான் இந்த திருப்பாடல். தன்னுடைய பலவீனத்திற்காக, தான் செய்த தவறுக்காக மன்னிப்பு வேண்டுகிறார். உண்மையான, உள்ளார்ந்த மனமாற்றத்தோடு இறைவனை நாடுகிறபோது, நிச்சயம் இறைவன் மனமிரங்குவார் என்கிற நம்பிக்கையை வெளிப்படுத்தக்கூடிய திருப்பாடல் இந்த திருப்பாடல்.
இன்றைய நாளில் இந்த திருப்பாடலை நாம் சிந்திப்பது மிகவும் பொருத்தமான ஒன்று. ஏனென்றால், இன்று தவக்காலத்தை தொடங்குகிறோம். நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சியாக இந்த தவக்காலத்தைப் பயன்படுத்திக்கொள்ள அன்னையாம் திருச்சபை நமக்கு அழைப்புவிடுக்கிறது. இன்றைய நற்செய்தி வாசகமும் ஒட்டுமொத்த நமது வாழ்க்கை எப்படி அமைய வேண்டும் என்பதை நமக்கு வலியுறுத்திக்கூறுகிறது. தவக்காலம் என்பது “ஏதோ நாற்பது நாட்கள் நோன்பிருந்தோம். அத்தோடு நமது கடமை முடிந்து விட்டது” என்ற, கடமைக்காக செய்யப்படக்கூடிய ஒறுத்தல் முயற்சிகளுக்கான காலம் அல்ல. அது நமது வாழ்வை மாற்றுவதற்கான முயற்சிகள் எடுக்கிற காலம். நம்மை பக்குவப்படுத்துவதற்கான முயற்சிகள் நிறைந்த காலம். நம்மை கடவுள்பால் ஈர்க்க வைப்பதற்கான உறுதியான காலம். அதற்கு நமது உள்ளார்ந்த தூய்மை மிகவும் அவசியமானதாக இருக்கிறது. அதைத்தான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. அந்த உள்ளார்ந்த தூய்மையை நாம் இந்த தவக்காலத்தில் நமது ஒறுத்தல் முயற்சிகள் வாயிலாக வெளிப்படுத்துவோம்.
தாவீது அரசர் தான் செய்த தவறுக்காக, மனம் வருந்தி, உள்ளார்ந்த மனமாற்றத்தைப் பெற்றுக்கொண்டு, கடவுளின் இரக்கத்திற்காக மன்றாடினாரோ, அதேபோல இந்த தவக்காலமானது வெறும் சடங்கு, கடமைக்கானதாக அல்லாமல், இந்த நாற்பது நாட்களும், நம்மை சிறப்பான மனிதனாக மாற்றிட உறுதுணையாக இருக்கிற காலமாக அமைந்திட இறைவனிடம் மன்றாடுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்