ஆண்டவரே இரக்கமாயிரும். ஏனெனில் நாங்கள் பாவம் செய்தோம்
இரக்கத்தின் பரிமாணங்களாக நாம் பலவற்றைப் பார்க்கலாம். அந்த இரக்கத்தின் பரிமாணங்களும் முக்கியமான ஒன்று மன்னிப்பு. அந்த மன்னிப்பு பற்றிதான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது. பொதுவாக, நாம் கடவுளிடத்தில் செபிக்க வருகிறபோது, நமது மனநிலை எப்படிப்பட்ட மனநிலையாக இருக்கிறது? ஒருபோதும் மன்னிப்பிற்காக நாம் செபிப்பது கிடையாது. கடவுளின் இரக்கத்தைப் பெறுவதற்காக மன்றாடுவது கிடையாது. நம்முடைய தேவைகளை நிறைவேற்றுவதற்காகத்தான் கடவுளிடம் செபிக்கிறோம், கடவுளைப் புகழ்கிறோம். ஆக, தேவையை நிறைவேற்றுவது தான், நமது செபத்தின் மையக்கருத்தாக இருக்கிறது. ஆனால், இறைவனின் மன்னிப்பைப் பெறுவதற்கும் நாம் செபிக்க வேண்டும். அதனையும் நாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் அழகாக எடுத்துக்காட்டுகிறது.
இந்த திருப்பாடலை(திருப்பாடல் 51: 1 – 2, 3 – 4, 10 – 11, 12, 150) “மன்னிப்பின் பாடல்“ என்று நாம் சொல்லலாம். கடவுளின் மன்னிப்பிற்காக, கடவுளின் அருளுக்காக, தாவீது கதறிய பாடல் தான் இந்த திருப்பாடல். இந்த திருப்பாடல் மீண்டும், மீண்டுமாக நமக்கு பதிலுரைப்பாடலில் தியானிப்பதற்குக் கொடுக்கப்படுகிறது. இது தவக்காலமாக இருப்பதனால், கடவுளின் இரக்கத்தையும், மன்னிப்பையும் பெறுவதற்கான காலமாக இருப்பதால், இந்த வகையில் நமக்கு தரப்படுகிறது. இங்கே இரக்கம் என்று சொல்லப்படக்கூடிய வார்த்தை, இறைவன் மனமிரங்க வேண்டும் என்ற பொருளில் தரப்படுகிறது. இதைப்பாடுகிறவர், தன்னுடைய குற்றங்களை ஏற்றுக்கொள்கிறார். தன்னுடைய தவறை அவர் ஒத்துக்கொள்கிறார். இறைவன் மட்டும் தான், அந்த குற்ற உணர்விலிருந்து தனக்கு விடுதலை தர முடியும் என்று நம்புகிறார். அந்த நம்பிக்கையோடு தான், இந்த பாடலைப் பாடுகிறார்.
ஒவ்வொரு முறையும் பாவ மன்னிப்பு அருட்சாதனம் பெறுவதற்கு முன்னதாக, இந்த திருப்பாடலை நாம் வாசித்து தியானிக்க வேண்டும். நமது பாவங்களை நினைத்துப்பார்ப்பதற்கும், கடவுள் தருகின்ற மன்னிப்பை முழுமையாச் சுவைப்பதற்கும் இது பேருதவியாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க முடியாது.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்