ஆண்டவருடைய கனிவான செயல்களை மறவாதே
திருப்பாடல் 103: 1 – 2, 13 – 14, 17 – 18
ஆண்டவருடைய கனிவான செயல்கள் எவை? ஆண்டவர் நம் குற்றங்களை மன்னிக்கின்றார். நம் நோய்களை குணமாக்குகின்றார். நம் உயிரைப் படுகுழியினின்று மீட்கின்றார். மொத்தத்தில் நம் வாழ்நாளை அவர் நலன்களால் நிறைவுறச் செய்கிறார். எனவே, நாம் ஆண்டவரையும், அவர் நமக்குச் செய்திருக்கிற உதவிகளையும் மறக்கக்கூடாது. இந்த செயல்களை நாம் மறக்காமல், ஆண்டவர்க்கு நன்றியுணர்வோடும், நம்பிக்கை உணர்வோடும் வாழுகிறபோது மட்டும் தான், இந்த செயல்களை நாம் தொடர்ந்து நமது வாழ்க்கையில் பெற முடியும். அதைத்தான் இன்றைய நற்செய்தி வாசகம் நமக்கு உணர்த்துகிறது.
இன்றைய நற்செய்தியில் இயேசு தன்னுடைய சொந்த ஊரில், வல்ல செயல்கள் செய்ய முடியாத நிலையில் இருப்பதைப் பார்க்கிறோம். தீய ஆவிகளைத் துணிவோடு எதிர்த்து அடக்கியவர், காற்றையும், புயலையும் உரிமையோடு கடிந்து கொண்டவர், நோயாளிகளை ஏராளமான எண்ணிக்கையில் குணப்படுத்தியவர், இங்கே தன்னுடைய சொந்த ஊரில் சுகம் கொடுக்க முடியாமல் இருப்பதைப்பார்க்கிறோம். அதற்கு காரணம், அவர்களிடத்தில் நம்பிக்கை இல்லை, நன்றியுணர்வும் இல்லை. இயேசு செய்திருக்கிற வல்ல செயல்களை அவர்கள் ஏற்றுக்கொள்ளவும் இல்லை. இயேசு செய்வார் என்கிற நம்பிக்கையும் அவர்களிடத்தில் இல்லை. இதனால், இயேசுவால் வல்ல செயல்களைச் செய்ய முடியவில்லை.
நமது வாழ்வில் ஆண்டவருடைய ஆசீர்வாதம் நமக்கு நிறைவாக கிடைக்க வேண்டுமென்றால், கடவுள் நமக்குச் செய்திருக்கிற செயல்களை நாம் நன்றியுணர்வோடு நினைத்துப்பார்க்க வேண்டும். தேவைக்கு மட்டும் கடவுளை நாடக்கூடியவர்களாக வாழக்கூடாது. நம்பிக்கை உணர்வும் கொண்டு, அவரிடத்தில் நாம் வருகிறபோது, நிச்சயம் நம்மால் ஆசீரைப் பெற்றுக்கொள்ள முடியும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்