ஆண்டவருக்கு நான் புகழ் பாடுவேன்
விடுதலைப்பயணம் 15: 1 – 2, 3 – 4, 5 – 6, 17 – 18
எகிப்தில் இஸ்ரயேல் மக்கள் அடிமைகளாக, பார்வோன் மன்னருக்கு ஊழியம் செய்து வருகின்றனர். கடவுள் அவர்களை அடிமைத்தளையிலிருந்து விடுவிப்பதற்காக, மோசேயையும், ஆரோனையும் அனுப்புகிறார். அவர்கள் பார்வோன் மன்னரிடத்தில் கடவுளின் வார்த்தையை அறிவிக்கின்றனர். கடவுளின் வல்ல செயல்களுக்கு முன்னால், தான் ஒன்றுமே இல்லை என்பதை உணர்ந்த பார்வோன் மன்னன், இஸ்ரயேல் மக்களை போக அனுமதிக்கிறான். ஆனால், அவர்களைப் போகவிட்டதற்காக மனம் வருந்துகிறான். அவர்களைப் பிரிந்ததற்காக அல்ல, மாறாக, அவர்கள் செய்து வந்த அடிமை வேலையை இனி தனக்கு யார் செய்வார்கள்? என்கிற எண்ணத்தினால், மனம் வருந்துகிறான். அவர்களை திருப்பி இழுத்து வர, ஆணையிடுகிறான். அப்போது, தண்ணீர் இரண்டாகப் பிளந்து, இஸ்ரயேல் மக்கள் கரைசேர்ந்து விடுகின்றனர். ஆனால், எகிப்தியர் தண்ணீரில் மூழ்கி இறந்துவிடுகின்றனர். இவ்வாறு கடவுள் தந்திருக்கிற மீட்பிற்கு நன்றியாக, மோசேயும், இஸ்ரயேல் மக்களும் பாடி ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைகின்ற பாடல் தான், இந்த பாடல்.
இந்த பாடலில் இஸ்ரயேல் மக்களுக்கு எகிப்தில் கடவுள் செய்திருக்கிற எல்லா வல்ல செயல்களையும் நினைவுகூர்ந்து, கடவுள் எவ்வளவுக்கு மேன்மைமிக்கவராக இருக்கிறார் என்பது, வெளிப்படுத்தப்படுகிறது. எகிப்தில் எவ்வளவோ தெய்வங்கள் இருந்தாலும், அவர்களை விடவும், இஸ்ரயேல் மக்களின் கடவுள் எந்த அளவுக்கு வலிமை உள்ளவர்களாக ஆற்றல் மிகுந்தவர்களாக இருக்கிறார் என்பதை, இங்கே நாம் பார்க்கலாம். ஏனென்றால், மத்திய கிழக்குப்பகுதியில் வாழ்ந்த கடவுள் நம்பிக்கை, எல்லா நாடுகளுக்கும் ஒரு கடவுள் இருக்கிறார். அந்த கடவுளின் வல்லமை, அந்த நாட்டின் எல்லை வரை தான் இருக்கும். அடுத்த நாட்டிற்கு வருகிபோது, அந்த கடவுளின் வல்லமை பலமற்றதாகப் போய்விடும். ஆனால், யாவே இறைவனின் வல்லமை உலகம் முழுவதிலும் பரந்து காணப்படுகிறது. அவர் தான் உண்மையான கடவுள் என்கிற செய்தி, இந்த பாடல் மூலமாக நமக்கு வெளிப்படுத்தப்படுகிறது.
வல்லமையுள்ள கடவுளை நாம் பெற்றிருக்கிறோம். அவர் சாதாரணமானவர் அல்ல. அதிசயங்களைச் செய்கிறவர். தன் மக்களுக்காக, அவர்கள் வாழ வேண்டும் என்பதற்காக எல்லாவிதமான பாதுகாவலையும் வழங்குகிறவர். அந்த இறைவனிடத்தில் முழுமையான நம்பிக்கை வைப்போம். அந்த நம்பிக்கையை நமது வாழ்வாக மாற்றுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்