ஆண்டவருக்கு அஞ்சி நடப்போர் ஆசி பெற்றவர்
திருப்பாடல் 128: 1 – 2, 3, 4 – 5
கடவுளுக்கு அஞ்சி வாழ்வது என்றால் என்ன? என்பது பற்றி, பல திருப்பாடல்கள் நமக்கு விளக்கமாகச் சொல்லியிருக்கிறது. இந்த திருப்பாடல் கடவுளுக்கு அஞ்சி வாழ்வதனால், பெறக்கூடிய நன்மைகளை சிறப்பாக எடுத்துரைக்கிறது. இந்த உலகத்தில் வாழக்கூடிய சாதாரண மனிதரின் என்னவாக இருக்கும்? தான் நன்றாக இருக்க வேண்டும். தன்னுடைய குடும்பத்தை நன்றாக வாழ வைக்க வேண்டும். தன்னோடு இருக்கிறவர்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். இது தான் அடிப்படையில், சாதாரணமான ஒரு மனிதனின் எண்ணமாக இருக்கிறது. இந்த எண்ணங்கள் எல்லாம், கடவுளுக்கு அஞ்சி வாழ்கிறபோது செயல்வடிவம் பெறுகிறது.
கனி தரும் திராட்சைக்கொடி என்பது வளமையை, செழிப்பைக் குறிக்கிறது. நிறைவான விளைச்சலைக் குறிக்கிறது. எதை எதிர்பார்த்து பயிரிடப்படுகிறதோ, அது நிறைவேறியதைக் குறிக்கிறது. திராட்சைச் செடி பலன் தர வேண்டும் என்கிற எண்ணத்தோடு தான், பயிரிடப்படுகிறது. அது பலன் தருகிறபோது, உண்மையிலே சிறப்பான மகிழ்ச்சி ஏற்படுகிறது. அதுதான் இங்கே சொல்லப்படுகிறது செய்தி. உம் பிள்ளைகள் ஒலிவக்கிளைகள் போல உம்மைச் சூழ்ந்திருப்பர் என்பது, நிறைவான ஆசீர்வாதத்தைக் குறிக்கக்கூடிய சொல். பழைய ஏற்பாட்டில், பிள்ளைச்செல்வம் கடவுள் கொடுக்கும் பரிசு. எத்தனை குழந்தைகள் இருக்கிறார்களோ, அவ்வளவுக்கு கடவுள் அந்த குடும்பத்தை ஆசீர்வதிக்கிறார் என்பதுதான் இதனுடைய அர்த்தமாக இருக்கிறது. ஆக, கடவுளுக்கு அஞ்சி வாழ்வோரின் குடும்பம் வளமையானதாக, நிறைவானதாக இருக்கிறது என்பதுதான் இங்கே நமக்குச் சொல்லப்படுகிற செய்தி.
கடவுளின் ஆசீர்வாதத்தை நாம் நிறைவாகப் பெற்றுக்கொள்ள வேண்டுமென்றால், அவருக்கு அஞ்சி வாழ்கிறவர்களாக நமது வாழ்வை, நாம் வாழ வேண்டும். அப்போது நிச்சயமாக, நாம் கடவுளின் அன்பையும், அருளையும் பெற்றவர்களாக வாழ்வோம் என்பதில், எந்தவித சந்தேகமும் இல்லை.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்