ஆண்டவரில் நாம் அகமகிழ்ந்தோம்
திருப்பாடல் 66: 1 – 3, 4 – 5, 6 – 7, 16, 20
இது ஒரு நன்றியின் திருப்பாடல் மட்டுமல்ல, கடவுளையும், அவரது மகிமையையும் போற்றிப்புகழக்கூடிய பாடலும் கூட. இது குறிப்பிட்ட சூழ்நிலையில் எழுதப்பட்ட பாடல அல்ல. பொதுவாக, கடவுளைப் போற்றுவதற்காக எழுதப்பட்ட பாடல். திருப்பாடல் ஆசிரியர், கடவுளது மேன்மையை உணர்ந்தவராக, தன்னுடைய உள்ளத்தின் நிறைவை இங்கே வார்த்தையாக வடிக்கின்றார். கடவுள் தன்னுடைய படைப்பின் தொடக்கத்திலும், இஸ்ரயேல் மக்களை வழிநடத்திய இடங்களிலெல்லாம் தன்னுடைய மாட்சிமையை வெளிப்படுத்திய தருணங்களையும் வியந்து பார்க்கிறார்.
இந்த திருப்பாடலின் முக்கியமான செய்தியாக, கடவுளுக்கு அஞ்சி நடப்பவர் எல்லாவிதமான ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொள்வார் என்று சொல்கிறார். கடவுள் யாருக்குச் சொந்தமானவர் என்று ஒரு யூதரிடத்தில் கேட்டால், தங்களுக்கு மட்டுமே என்று பதில் சொல்வார். ஆனால், இந்த திருப்பாடலில், சற்று வித்தியாசமான பதில் நமக்குத் தரப்படுகிறது. கடவுள் யாருக்குச் சொந்தமானவர்? கடவுள் யாருக்குப் பதில் கொடுப்பார்? என்று பார்க்கிறபோது, கடவுளுக்கு அஞ்சக்கூடிய அனைவர்க்குமே, கடவுள் பதில் தருவார். அவர்களை நன்மைகளாலும், வளமையினாலும் நிரப்புவார் என்று, ஆசிரியர் பதில் சொல்கிறார். நாம் அனைவருமே கடவுளுக்கு அஞ்சி நடந்தால், நிச்சயம் கடவுள் தரும் நன்மைகளை நாம் நிறைவாகப் பெற்றுக்கொள்ள முடியும்.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுளுக்கு அஞ்சி வாழக்கூடிய மக்களாக வாழ்வதற்கு முயற்சி எடுப்போம். கடவுள் தரும் நன்மைகளை நிறைவோடு பெற்று, வளமோடு வாழ முயற்சிப்போம். கடவுளுக்கு அஞ்சி வாழக்கூடியவர்களை கடவுள் ஒருபோதும் கைவிடமாட்டார்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்