ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள்
எரேமியா 31: 10, 11 – 12 ஆ, 13
இஸ்ரயேல் மக்களின் வாழ்வில் கடவுள் பல்வேறு அதிசயங்களைச் செய்திருக்கிறார். இந்த அதிசயங்களை, ஆச்சரியங்களை நேரடியாக அனுபவித்தவர்கள் இஸ்ரயேல் மக்கள். ஆனாலும், அவர்கள் கடவுளுக்கு எதிராக தவறுகளுக்கு மேல் தவறு செய்கிறார்கள். அவர்கள் செய்த தவறுக்கெல்லாம் அடிப்படைக் காரணம், கடவுளின் வார்த்தைக்கு செவிமடுக்காது, தங்களது மனம்போனபோக்கில் வாழ்ந்த வாழ்க்கை. இந்த பிண்ணனியில் தான், இறைவாக்கினர் எரேமியா, ஆண்டவரின் வாக்கைக் கேளுங்கள் என்று அழைப்புவிடுக்கிறார்.
கடவுளின் வார்த்தையை எதற்காகக் கேட்க வேண்டும்? கடவுள் எல்லாருக்கும் பொதுவானவர். அவர் நியாயத்தின் பக்கத்தில் இருக்கிறவர். தவறு செய்கிறவர்களைத் தண்டிக்கிறார். நல்லது செய்கிறவர்களுக்கு கைம்மாறு செய்கிறார். ஆனால், மனிதர்கள் சுயநலத்தோடு சிந்திக்கிறார்கள். எது சரி? எது தவறு? என்பது அவர்களுக்கு தெரிந்திருந்தாலும், தவறையே அவர்கள் செய்கிறார்கள். கடவுளின் வார்த்தையைப் புறக்கணிக்கிறார்கள். இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடவை ஏற்படுத்துகிறது. கடவுளின் பார்வையில் தீயதைச் செய்ய தூண்டுகிறது. இதனால், அவர்கள் சந்திக்கிற தோல்விகளும், துன்பங்களும் அதிகம். எனவே தான், இறைவாக்கினர் எரேமியா கடவுளின் வார்த்தைக்கு செவிமடுப்பதற்கு அழைப்புவிடுக்கிறார்.
நம்முடைய வாழ்விலும் கூட, நன்மை எது? என்பது தெரிந்திருந்தும் நாம் தீமையையே நாடுகிறவர்களாக வாழ்ந்து வருகிறோம். கடவுளுக்கு விரோதமான செயல்களில் முழுமையான ஈடுபாடு காட்டுகிறோம். கடவுளின் வார்த்தையைக் கேட்கக்கூடியவர்களாக வாழும் வரத்தை வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்