ஆண்டவரின் பெயரே நமக்குத்துணை
திருப்பாடல் 124: 1 – 3, 4 – 6, 7 – 8
இந்த திருப்பாடல் இஸ்ரயேல் மக்களுடைய வாழ்வை திரும்பிப்பார்க்கச் செய்கிற திருப்பாடல். நம்முடைய வாழ்வில், நமக்கு ஏணியாக இருந்து உயர்த்திவிட்ட மனிதர்களை நாம் மறக்கிறவர்களாக இருக்கிறோம். உயரத்திற்குச் சென்றவுடன், நம்மை ஏற்றி விட்டவர் நம் நினைவிலிருந்து அகன்று போய் விடுகிறார். அவரை நாம் ஒரு பொருட்டாகப் பார்ப்பதில்லை. ஆனால், அவர் இல்லையென்றால், நாம் இந்த நிலைக்கு வந்திருக்க முடியாது என்பது, நமது அறிவிற்கு எப்போதுமே எட்டாது. இந்த நிலை தான் திருப்பாடலிலும் வெளிப்படுகிறது.
கடவுள் இஸ்ரயேல் மக்களின் வாழ்க்கையில் வந்திருக்காவிட்டால், அவர்கள் இந்த நிலையை அடைந்திருக்க முடியுமா? இந்த உயரத்தைத் தொட்டிருக்க முடியுமா? என்கிற கேள்விகளை, திருப்பாடல் ஆசிரியர் கேட்கிறார். ஒருவேளை ஆண்டவர் இல்லையென்றால், இஸ்ரயேல் மக்களை எதிரிநாட்டவர் அழித்தொழித்திருப்பார்கள். அவர்கள் இன்னும் நாடோடிகளாய்த்தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். யாரும் அவர்களை எதுவும் செய்துவிட முடியும் என்கிற நிலையில் தான் இருந்திருப்பார்கள். அவர்களை இந்த உயரத்திற்கு ஏற்றிவிட்டவர் யாவே இறைவன் என்பதை, இஸ்ரயேல் மக்கள் அனைவரும் உணர வேண்டும் என்பதுதான் திருப்பாடல் ஆசிரியரின் வேண்டுகோளாக இருக்கிறது.
இறைவன் நமக்கு பல வகைகளில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ உதவி செய்திருக்கிறார். அந்த இறைவனிடத்தில் நாம் எப்போதும், நன்றியுள்ளவர்களாக வாழ வேண்டும். அந்த பண்பை நாம் எப்போதும் மறந்துவிடக்கூடாது. கடவுளோடு நாம் இணைந்திருக்க வேண்டி இந்த திருப்பாடலை நாம் தியானிப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்