ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு !
இன்று குருத்து ஞாயிறு என்று நாம் சொல்லிக்கொண்டாலும், திருவழிபாட்டு முறைமைப்படி இன்றைய நாள் ஆண்டவரின் பாடுகளின் ஞாயிறு என்றுதான் அழைக்கப்படுகிறது. ஆண்டவருடைய துன்பங்களையும், இறப்பையும் பற்றி இந்த வாரம் முழுவதும் நாம் சிந்திக்க இருக்கிறோம்.
இந்த வாரம் முழுவதுமே நமது சிந்தனைக்காக இயேசுவின் தற்கையளிப்பை எடுத்துக்கொள்வோம். பொதுவாகவே, ஒரு மனிதர் எப்படி வாழ்கிறாரோ, அப்படித்தான் இறக்கிறார். இயேசுவும் அப்படியே! அவர் வாழ்ந்தபோது, தன்னை முழுமையாக இறைவனுக்குக் கையளித்தார். இறந்தபோதும் அவ்வாறே. மனித ஆளுமையை நாம் ஐந்து கூறுகள் கொண்டதாக வகைப்படுத்தலாம். அவை: 1. உடல் 2. மனம் 3. ஆன்மா 4. உணர்வுகள் 5. உயிராற்றல். இந்த ஐந்தினையும் நாம் இறைவன்பால் எழுப்புகின்றபோதுதான், நமது செபம், இறையொன்றிப்பு, அல்லது அர்ப்பணம் முழுமையாகும். இந்த வாரம் முழுவதும் இயேசு இந்த ஐந்து நிலைகளிலும் எவ்வாறு தன்னை முழுமையாகத் தந்தை இறைவனுக்கு ஒப்புக்கொடுத்தார் என்று சிந்திப்போம்.
இயேசு தன் உடலை ஒப்புக்கொடுத்தார்:
நம்மை அடையாளப்படுத்தும் மிகப்பெரும் அடையாளம் நமது உடல்தான். ஆனால், நம் உடல் நமக்குச் சொந்தமல்ல. அது #8220;ஆண்டவருக்கே உரியது. ஆண்டவரும் உடலுக்கே உரியவர்” (1 கொரி 6:13 ஆ). எனவேதான், #8220;கிறிஸ்து உலகிற்கு வந்தபோது, ‘பலியையும் காணிக்கையையும் நீர் விரும்பவில்லை. ஆனால், ஓர் உடலை எனக்கு அமைத்துத் தந்தீர். எரிபலிகளும் பாவம் போக்கும் பலிகளும் உமக்கு உகந்தவையல்ல. எனவே, நான் கூறியது: என் கடவுளே, உமது திருவுளத்தை நிறைவேற்ற இதோ வருகின்றேன்’ என்கிறார்” (எபி 10:5-7) என்று எபிரேயர் திருமடல் சொல்கிறது. மேலும், #8220;இந்தத் திருவுளத்தால்தான் இயேசு கிறிஸ்து ஒரே ஒருமுறை தம் உடலைப் பலியாகச் செலுத்தியதின் மூலம் நாம் துhயவராக்கப்பட்டிருக்கிறோம்” (எபி 10:10). இது இயேசுவின் அர்ப்பணத்தின் முதல் படி. இயேசு தனது உடலைத் தனதெனக் கருதாமல், தந்தை இறைவனுக்கு உரியது என்றே வாழ்ந்தார். அவரது திருவுளத்தை நிறைவேற்றுவதற்கு மட்டுமே தன் உடலைப் பயன்படுத்தினார். இறுதியாக, தனது உடலைப் பலியாக ஒப்புக்கொடுத்தார்.
மன்றாடுவோம்: எங்களை உமது மாட்சியின் பங்குதாரர்களாக அழைக்கும் ஆண்டவரே, உம்மைப் போற்றுகிறோம். நீர் உமது உடலை இறைவனின் ஆலயமாக மாற்றியதுபோல, நாங்களும் எங்கள் உடலை உம்மை மாட்சிமைப்படுத்த பயன்படுத்துவோமாக ! உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
–அருட்தந்தை குமார்ராஜா