ஆண்டவரின் நியமங்கள் சரியானவை, அவை இதயத்தை மகிழ்விப்பவை
திருப்பாடல் 19: 7, 8, 9, 10
இந்த உலகத்தில் இருக்கிற அனைவருமே சமமானவர்கள். இந்த உலகம் யாருக்கும் தனிப்பட்ட வகையில் சொந்தமானது அல்ல. கடவுளின் படைப்பு எல்லாருக்கும் பொதுவானது. ஆனால், ஒரு சிலர் தங்களது சுய லாபத்திற்காக, தங்களது வலிமையைப் பயன்படுத்தி மற்றவர்களை அடக்கி ஒடுக்கி, தாங்கள் மட்டும் அனுபவிக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். எனவே, அனைவரையும் கட்டுப்படுத்துவதற்கு ஒழுங்குகளும், சட்டங்களும் இயற்றப்பட்டிருக்கின்றன. இந்த ஒழுங்குகள் பலருக்கு கடுமையானவையாக இருக்கின்றன.
இன்றைய திருப்பாடலின் வரிகளில் ஆண்டவரின் கட்டளைகள் இதயத்தை மகிழ்விப்பவையாக இருக்கின்றன என்று ஆசிரியர் சொல்கிறார். யாருக்கு ஒழுங்குகள் இதயத்திற்கு இனிமையானதாக இருக்கும் என்றால், கடவுளுக்கு அஞ்சி வாழ வேண்டும், எல்லாரும் இன்புற்றிருக்க வேண்டும் என்கிற எண்ணம் கொண்டிருக்கிறவர்களுக்கு மட்டும் தான், அப்படி இருக்கும். மற்றவர்களுக்கு அது எப்போதும் கடினமானதாக, கடுமையானதாகத்தான் இருக்கும். ஆண்டவரின் கட்டளைகள் கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், அதனை கடைப்பிடித்து வாழ்கிறபோது, அது நமக்கு மகிழ்ச்சியைத் தருகிற அனுபவமாக இருக்கிறது.
நம்முடைய வாழ்வில் கடவுள்தரும் ஒழுங்குகளையும், கட்டளைகளையும் மதித்து வாழ்வோம். அந்த வாழ்க்கை தான் நமக்கு எல்லாவகை துன்பங்களிலிருந்து விடுதலையையும், கடவுளின் பார்வையில் மகிழ்ச்சியையும் தரும். அத்தகைய வாழ்க்கை வாழ, இறையருள் வேண்டி மன்றாடுவோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்