ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்
திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 17 – 18, 33 – 34
இன்றைய திருப்பாடல் திருச்சட்டத்தைப்படி நமக்கு அறிவுரை கூறக்கூடிய பாடலாக அமைகிறது. திருச்சட்டம் என்பது என்ன? அது கடவுளின் சட்டம். அது கடவுள் கொடுத்திருக்கிற, அமைதியாக, நிறைவோடு வாழ கடவுள் கொடுத்திருக்கிற ஒழுங்குமுறை. நம்மை பக்குவப்படுத்தக்கூடிய வழிமுறைகள் அடங்கிய தொகுப்பு. நாம் கடவுளின் அரியணை நோக்கிச்செல்ல உதவும் வழித்தடம். வாழ்வைக் காட்டக்கூடிய வழி. கடைப்பிடிப்பதற்கு கடினமாக இருந்தாலும், வாழ்வின் முழுமையான நிறைவை நாம் பெற்றுக்கொள்வதற்கு இதுதான் ஒரே வழி.
கடவுளின் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பது எளிதானது அல்ல. ஆனால், அதனை கடைப்பிடிக்க வேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலே போதும், கடவுள் நம்மை வழிநடத்துவார் என்கிற நம்பிக்கையை இது நமக்கு முழுமையாக உணர்த்துகிறது. அதனைக் கடைப்பிடிப்பதற்கு நாம் கடவுளிடம் பலத்தைக் கேட்க வேண்டும். எந்தவொரு நன்மையான செயலையும் செய்கிறபோது, நமக்கு நிச்சயம் பலவிதமான சங்கடங்கள் வரும். ஆனால், அதனை நாம் செய்வதற்கு கடவுளின் அருளை முழுமையாகக் கேட்க வேண்டும். அந்த திருச்சட்டத்தை ஒரு மனிதனால் வாழ முடியும் என்பதை நிறைவேற்ற நம் ஆண்டவர் இயேசுகிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்தார். திருச்சட்டத்தை நிறைவாக்கி, வாழ்ந்துகாட்டி, நம்மையும் வாழப்பணிக்கிறார்.
கடவுளின் சட்டங்களை நாம் நமது வாழ்வில், நாம் நடக்கும் வழித்தடத்திற்கு ஒளியாகக் கொண்டு வாழ்ந்தால், நிச்சயம் நம்மால் நிறைவை அடைய முடியும். அந்த நம்பிக்கையைத்தான் இந்த திருப்பாடல் நமக்குத்தருகிறது. அந்த கடவுளின் திருச்சட்டத்தின் ஒளியில் நாமும் நடக்க கடவுளின் அருள்வேண்டுவோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்