”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”
திருப்பாடல் 119: 1 – 2, 4 – 5, 7 – 8
”ஆண்டவரின் திருச்சட்டப்படி நடப்போர் பேறுபெற்றோர்”
இந்த திருப்பாடல் ஒரு சில தனித்தன்மைகளைப் பெற்ற திருப்பாடல். இருபத்திரெண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இந்த இருபத்திரெண்டு என்பது எபிரேய மொழியில் இருக்கக்கூடிய எழுத்துக்களின் எண்ணிக்கை. ஒவ்வொரு பிரிவும், எபிரேய எழுத்து வரிசையில் தொடங்கக்கூடியதாக இருக்கிறது. (தமிழில் ஆத்திச்சூடி பாடல் அமைந்திருப்பது போல…. அறம் செய்ய விரும்பு, ஆறுவது சினம், இயல்வது கரவேல்…) திருச்சட்டத்தின் புகழைப் பரப்பும் பாடல் என்றும் சொல்லலாம். இளைய தலைமுறையினருக்கான அறத்தையும், வாழ்க்கைநெறிகளையும் கற்றுத்தரும் பாடல். அவர்களது வாழ்க்கையின் மீதுள்ள அக்கறையினை வெளிப்படுத்தும் பாடல்.
திருச்சட்டம் என்பது கடவுள் வகுத்துக்கொடுத்தச் சட்டம். அந்த சட்டத்தை நாம் அனைவரும் பின்பற்ற வேண்டும் என்று ஆண்டவர் பணிக்கிறார். கடவுளுடைய சட்டம் நாம் தவறான பாதைக்குச் செல்வதிலிருந்து பாதுகாப்பு தருகிறது. அவரைப் பற்றிப்பிடித்து வாழ, அவரது வழியில் நடக்க நமக்கு பேருதவியாக இருக்கிறது. நாம் அனைவருமே சிறப்பான வாழ்க்கை வாழ வேண்டும் என்று கடவுள் பணிக்கிறார். நமது வாழ்க்கை மகிழ்ச்சியாக அமைய வேண்டும் என்று அவர் எண்ணுகிறார். அதற்கு நாம் கடவுளின் நெறிமுறைகளுக்கு ஏற்ப வாழ வேண்டும். இப்படிப்பட்ட வாழ்க்கைநெறிகளை நாம் பின்பற்றி வாழ்கிறபோது, கடவுளின் முன்னிலையில் நாம் பேறுபெற்றவர்களாக மாறுகிறோம்.
நமது வாழ்வின் சங்கடங்களுக்கு மனம் போன போக்கில் வாழ்வதுதான் காரணம். அந்த மனம்போன போக்கை வாழாமல், கடவுள் நமக்குக் காட்டிய வழியில் நாம் வாழ முற்பட வேண்டும். அந்த வாழ்க்கை நமக்கு நிறைவான ஆசீரை தரக்கூடிய வாழ்வாக இருக்கும்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்