ஆண்டவரின் திருச்சட்டத்தில் மகிழ்ச்சியுறுபவர்
திருப்பாடல் 1: 1 – 2, 3, 4 & 6
மகிழ்ச்சி என்கிற ஒற்றைச் சொல்லுக்காகத்தான் இந்த உலகத்தில் இருக்கிற அனைவரும் ஏங்கிக்கொண்டிருக்கிறோம். நாம் செய்கிற வேலை, நம்முடைய கடின உழைப்பு, நாம் ஈட்டுகிற செல்வம் அனைத்துமே இந்த மகிழ்ச்சிகாக மட்டும் தான். இந்த மகிழ்ச்சியான வாழ்க்கை நமக்கு அமைய வேண்டுமென்றால், நமது வாழ்க்கை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான பதில் தான் இன்றைய திருப்பாடல். எப்படி வாழ்ந்தால், நாம் மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதற்கான அழைப்பாக இந்த திருப்பாடல் அமைகிறது.
மகிழ்ச்சியாக வாழ விரும்பும் ஒரு மனிதர் ஆண்டவரின் திருச்சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து வாழ வேண்டும். இது தான் மகிழ்ச்சியான வாழ்விற்கான அடிப்படை. திருச்சட்டம் என்பது கடவுள் நமக்கு வழங்கிய சட்டம். நாம் எப்படி வாழ வேண்டும் என்று நமக்கு ஒழுங்குமுறைகளை விளக்கக்கூடிய வழிகாட்டி. அந்த திருச்சட்டத்தை மேலோட்டமாக அல்லாமல், அதனை தியானித்து, அந்த திருச்சட்டத்தின் உட்பொருளை ஆராய்ந்து அறிந்து, அந்த சட்டம் நமக்குக் காட்டுகிற பொருள் அறிந்து அதற்கேற்ப நம்முடைய வாழ்வை நாம் அமைத்துக்கொள்ள வேண்டும். அந்த சட்டங்களைக் கடைப்பிடிக்கிறபோது நாம் பல்வேறு விதமான சிக்கல்களை சந்திக்க நேரிடலாம். ஆனால், நமக்கு நிச்சயம் மகிழ்ச்சி கிடைக்கும்.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும், கடவுளின் சட்டங்களைக் கடைப்பிடிக்கிறவர்களாக வாழ வேண்டும் என்பது தான், நம்முடைய தாய்த்திருச்சபையின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. அதற்கேற்ப தான், நமக்கு பக்திமுயற்சிகளையும், வழிபாட்டையும் தந்திருக்கிறது. இந்த வழிபாடுகளில் நம்மையே முழுமையாக ஒன்றிணைத்து, மகிழ்ச்சியோடு வாழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்