ஆண்டவரின் சொற்படியே வலைகளைப் போடுவோம்.லூக்கா 5:5
இயேசுகிறிஸ்து இந்த உலகத்தில் வாழ்ந்த காலத்தில் தமக்கென 12 சீடர்களை தெரிந்துக்கொண்டு தம்முடைய வல்லமையை அவர்களுக்கும் அளித்து நீங்கள் எங்கும் சென்று என் நற்செய்தியை அறிவியுங்கள் என சொல்கிறார்.
ஒருநாள் அவர் கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் அவரின் இறைவார்த்தையை கேட்பதற்கு நெருக்கிக் கொண்டு இருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக்கண்டார். மீனவர் படகைவிட்டு இறங்கி வலைகளை அலசிக்கொண்டு இருந்தனர். அப்படகுகளுள் ஓன்று சீமொனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதைச் சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்கு கற்பித்தார். அவர் பேசி முடிந்தபின்பு சீமோனை நோக்கி ஆழத்திற்கு தள்ளிக் கொண்டுபோய் மீன் பிடிக்க உங்கள் வலைகளை போடுங்கள்என்றார்.
ஆழத்திற்கு தள்ளிக்கொண்டுபோய் என்பதற்கு எதிர் காலத்தில் நாம் செய்ய வேண்டிய அருள்பணியைக் குறிக்கும். சீமோன் மறுமொழியாக ஐயா,இரவு முழுதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை. ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன் என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களை பிடித்தார்கள் வலைகள் கிழியத் தொடங்கவே மற்ற படகிலிருந்து தங்கள் நண்பர்களை கூப்பிட்டு தங்களுக்கு உதவி செய்யும்படி அழைத்தனர்.அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையிலிருந்தன.என்று லூக்கா 5 : 1 to 7 வரை உள்ள வசனங்களில் வாசிக்கிறோம்.
அன்பானவர்களே!நாமே ஒரு காரியத்தை யோசித்து செயல்படுத்த முயற்சி செய்வோமானால் நமக்கு எதுவும் வாய்க்காது. தோல்வியை தழுவி மனம் சோர்ந்துபோய் விடுவோம்.அதுவே ஆண்டவரின் சொற்படி நடந்தொமானால் எப்படி வலை கிழியத்தக்கதாக மீன்களை ஆண்டவர் கொடுத்தாரோ அதுபோல் நமக்கு வேண்டிய எல்லா ஆசீர்வாதத்தையும் கொடுப்பார்.நாமும் பயன்பெற்று நம்மை சுற்றி இருக்கும் மக்களுக்கும் நம்மை ஆசீர்வாதமாக இருக்கும். ஆகையால் நாம் தினமும் ஆண்டவரின் வார்த்தையை வாசித்து தியானித்து அதன்படியே அதாவது அவர் சொற்படியே வலையை போடுகிறவர்களாய் செய்து அவரின் சித்தத்தை நிறைவேற்றி வாழ்ந்து பிறரையும் வாழ வைத்து ஆண்டவருக்கு மகிமையை செலுத்துவோம்.
ஜெபம்
அன்பின் ஆண்டவரே!உம்மை போற்றுகிறோம், புகழ்கிறோம். அப்பா உமது சொற்படியே செய்ய எங்களுக்கு போதிக்க வேண்டுமாய் கெஞ்சிக் கேட்டுக்கொள்கிறோம். உமது சித்தத்தை நன்கு அறிந்து அதன்படியே நடக்க கற்றுத்தாரும்.உமது முகத்தை எங்கள்மேல் பிரகாசிக்கச் செய்து எங்கள்மேல் கிருபையாய் இரும். உமது முகத்தை எங்கள்மேல் பிரசன்னமாக்கி எங்களுக்கு சமானாத்தை கட்டளையிடும். அனுதினமும் உமது வேதத்தை வாசிக்கவும் உம்மை கருத்தோடு தேடவும் உதவிச் செய்யும். உம்மையே நம்பி இருக்கிறோம். எங்களுக்காக உமது உயிரையே கொடுத்தீரே! மற்றவற்றையும் நீர் கொடுக்காமல் இருப்பீரோ? நிச்சயம் எங்களுக்கு அருளி செய்வீர். துதி, கனம், மகிமை யாவும் உமக்கே செலுத்துகிறோம். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறோம் நல்ல பிதாவே! ஆமென்!! அல்லேலூயா!!!.