ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை
திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 7 – 8
யூதர்கள் தங்களின் வாழ்க்கையில் நடக்கிற எல்லாவற்றையும், கடவுளின் செயலோடு பொருத்திப்பார்க்கிறவர்கள். தங்கள் வாழ்வில் நடக்கிற எல்லாமே கடவுளின் ஆணைப்படி தான் நடக்கிறது. கடவுள் தான் தங்களை வழிநடத்துகிறார் என்பதில், ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தனர். இந்த பிண்ணனியில் தான், திருப்பாடல் ஆசிரியர், ஆண்டவரின் செயல்கள் நம்பிக்கைக்குரியவை என்று சொல்கிறார். இதனுடைய பொருள் என்ன?
வாழ்க்கையில் ஒரு சில விரும்பாத நிகழ்வுகள் நடக்கிறபோது, நாம் கடவுளிடத்தில் கோபப்படுகிறோம். கடவுள் தான் நம்மை இந்த நிலைக்கு விட்டுவிட்டார் என்று வருத்தமடைகிறோம். அவரிடத்தில் நாம் முறையிடுகிறோம். ஆனால், காலம் கடந்து நாம் சிந்திக்கிற வேளையில், நாம் விரும்பாத நிகழ்வுகள் தான், நமக்கு மிகச்சிறப்பான ஆசீர்வாதத்தை தந்திருப்பதை, நம்முடைய வாழ்வில் நாம் அனுபவித்திருப்போம். அப்போதுதான், நாம் கடவுளுக்கு அந்த விரும்பாத நிகழ்வுகளைத் தந்ததற்கு நன்றி செலுத்துகிறோம். இந்த பிண்ணனியில் பார்க்கிறபோது, கடவுளின் செயல்கள் எப்போதுமே உயர்ந்து நிற்கிறது. நாம் பார்க்கிற பார்வையில் தான், அது தாழ்ந்ததாக இருக்கிறது. ஆனால், நேரம் வருகிறபோது, கடவுளின் கருணையை எண்ணி நாம் வியந்து நிற்கிறோம்.
நம்முடைய வாழ்வில், நிச்சயம் இதனை நாம் அனுபவித்திருப்போம். நாம் விரும்பாத நிகழ்வுகளின் வழியாக, நிச்சயம் கடவுள் மிகப்பெரிய ஆசீர்வாதத்தை வழங்கி, அவர் எந்நாளும் நம்மீது அன்பு வைத்திருக்கிறார் என்பதை, நமக்கு வெளிப்படுத்திக் கொண்டேயிருப்பார். அந்த இறைவனிடத்தில் நம்மையே முழுமையாக ஒப்படைப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்