ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை
திருப்பாடல் 111: 1 – 2, 3 – 4, 5 – 6
ஆண்டவரின் செயல்களை உயர்ந்ததாக இந்த திருப்பாடல் நமக்கு எடுத்தியம்புகிறது. ஆண்டவரின் செயல்கள் எவை? ஆண்டவர் எளியவர்கள் நீதி பெற உழைக்கிறார். தன்னை நம்பியவர்களை கைவிடாது காக்கிறார். ஏழைகள் பக்கமாக நிற்கிறார். அநீதியையும், அநீதி செய்கிறவர்களையும் வெறுக்கிறார். கடவுள் மீது முழுமையான நம்பிக்கை வைக்கிறவர்களையும், கடவுளையே தங்களின் செல்வமாக ஏற்றிருக்கிறவர்களையும் அவர் ஒருபோதும் கைவிடாது பாதுகாக்கிறார்.
கடவுளின் செயல்கள் எப்போதும உயர்ந்தவையாகவே இருக்கிறது. பல வேளைகளில் கடவுளின் செயல்களில் இருக்கிற நீதியை, உண்மையை உணர முடியாதவர்களாக இருக்கிறோம். நம்முடைய பார்வையில் கடவுளின் செயல்கள் சில நேரங்களில் புரிந்து கொள்ள முடியாததாக இருக்கிறது. அதனால் கடவுள் மீது கோபப்படுகிறோம். ஆனால், காலம் நாம் எவ்வளவுக்கு கடவுளைப் பற்றிய தவறான பார்வையைக் கொண்டிருக்கிறோம் என்பதை விளக்குகிறது. இஸ்ரயேல் மக்கள் கடவுளை வழிநடத்தியபோதெல்லாம், கண்டித்து திருத்தியபோதெல்லாம், கடவுளை வேண்டா வெறுப்பாகவே பார்த்தார்கள். அவர்கள் வழியில் சென்றார்கள். ஆனால், அதன் பொருட்டு, இன்னல்கள் வந்தபோது, அவர்கள் கடவுளின் பேரிரக்கத்தை உணர்ந்து கொண்டார்கள்.
நம்முடைய வாழ்வில் நாம் எப்போதும் கடவுள் மீது முழுமையான நம்பிக்கை உள்ளவர்களாக வாழ வேண்டும். கடவுளை நாம் எப்போதும் புரிந்து கொள்ள முயற்சி எடுப்பதை விட, அவர் மீது நம்முடைய நம்பிக்கையை அதிகப்படுத்த முயற்சி எடுக்க வேண்டும். அதைத்தான் இந்த திருப்பாடல் நமக்குக் கற்றுக்கொடுக்கிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்