ஆண்டவரின் கிருபை என்றும் உள்ளது
கடவுளைத் துதியுங்கள்.அவர் கிருபை என்றும் உள்ளது என்று தாவீது சங்கீதம் 107:1ல் சொன்னதுபோல நாமும் சொல்வோம். ஏனெனில் அவர் கிருபை இல்லாமல் நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. இஸ்ரயேல் மக்கள் வனாந்தரத்தில் கடந்து வந்தபொழுது ஆண்டவரின் மகிமையை கண்கூடாக கண்டு அவருக்கு விரோதமாக பாவம் செய்தார்கள். ஆனாலும் அவர்கள் மறுபடியும் ஆண்டவரை நோக்கி கூப்பிடும் பொழுது அன்பே உருவான தேவன் அவர்கள் கூப்பிடுதலுக்கு செவிக்கொடுத்து அவர்களின் எல்லா இக்கட்டுகளில் இருந்தும் காப்பாற்றினார்.
கானான் நாட்டை காணும் முன் ஆண்டவருக்கு விரோதமாக முறுமுறுத்து பசியாகவும், தாகமாகவும், ஆத்துமா தொய்ந்ததாகவும் அலைந்து திரிந்தார்கள். தங்கள் ஆபத்திலே ஆண்டவரை நோக்கி கூப்பிட்டார்கள். அப்பொழுதெல்லாம் ஆண்டவர் அவர்கள் ஆத்துமாவை திருப்தியாக்கி, நன்மையினால் நிரப்பினார். அவருடைய கிருபையின் நிமித்தமும், அவர் மனுஷர் மேல் வைத்த பிரியத்தின் நிமித்தமும் அப்படி செய்தார். அந்தகாரத்திலுள்ள மரண இருளிலுமிருந்து அவர்களை வெளிப்படப்பண்ணி வெண்கலக் கதவுகளை உடைத்து இருப்புத்தாழ்ப்பாள்களை முறித்து, தமது வசனத்தை அனுப்பி அவர்களைக்குணமாக்கி, எல்லா அழிவுக்கும் விலக்கி காத்தார். ஏனெனில் அவரின் கிருபையின் நிமித்தமும், மனுஷர் மேல் வைத்த அன்பின் நிமித்தமும் அப்படி செய்தார்.
அதே ஆண்டவர் இன்றும் நம்மோடு இருக்கிறார். அவர் மனம் மாறாதவர்.கூப்பிடுகிர யாவருக்கும் உதவி செய்யும் ஆண்டவர். நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். அன்பானவர்களே! இன்றும் நீங்கள் கூப்பிடும் பொழுது உங்கள் மத்தியில் வருவார். என் மகனே, மகளே, உனக்கு என்ன வேண்டும் என்று கேட்பார். ஆண்டவரை நோக்கி கூப்பிடுங்கள். உங்கள் வாழ்க்கையில் உங்கள் தேவைகள் யாவையும் கேட்டு பெற்றுக்கொள்ளுங்கள். அவரை கடவுளாக பெற்ற நாம் யாவரும் பாக்கியம் பெற்றவர்கள். அவரின் கிருபை நம் ஒவ்வொருவரின் மேலும் இருப்பதாக.
அன்பே உருவான இறைவா!
உம்மை போற்றுகிறோம், துதிக்கிறோம். நீர் எங்கள்மேல் வைத்த உமது கிருபையின் நிமித்தம் நன்றி சொல்லுகிறோம். எங்கள் இக்கட்டான நேரங்களில் நாங்கள் கூப்பிடும் பொழுது நீரே எங்களுக்கு உதவ வேண்டுமாய் உம்மிடத்தில் கெஞ்சி மன்றாடுகிறோம். அன்று இஸ்ரயேல் மக்களுக்கு உதவி கடலை இரண்டாக பிரித்து உமது மக்களை காப்பாற்றி எகிப்தியரை அழித்து போட்டதுபோல இன்றும் எங்களுக்கு விரோதமாய் எழும்பும் யாவரின் கைக்கும் எங்களை விலக்கி உமது கரத்தால் மீட்டு காத்தருளும். அன்பராம் இயேசுவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் பிதாவே! ஆமென்! அல்லேலூயா!!