ஆண்டவரின் கருவி அசீரியா ! (முதல் வாசகம்)
அசீரியர்கள் இஸ்ரயேல் மக்களைத் தோற்கடித்து, அடி பணியச் செய்த நிகழ்ச்சியை இறைவனின் பார்வையில் பார்த்து, பொருள் கொள்கிறார் எசாயா இறைவாக்கினர். இஸ்ரயேல் இறைவனைவிட்டுப் பிரிந்து சென்றதால், அதற்கு ஒரு பாடம் கற்றுத் தரும் நோக்குடன், அசீரியாவைத் தனது கருவியாக இறைவன் பயன்படுத்தினார் என்று சொல்கிறார் எசாயா. சில நேரங்களில் நமது வாழ்விலும் இதுபோன்று நிகழலாம். நாம் மனம் திரும்ப வேண்டும், இறைவனிடம் திருந்தி வரவேண்டும் என்பதற்காக, நமது எதிரிகளைக் கருவியாகப் பயன்படுத்துகிறார் இறைவன். நம்மைத் தாழ்வுக்கு உட்படுத்துகிறார். இவ்வாறு, அனைத்தும் இறைவனின் திருவுளப்படியே நிகழ்கின்றன என்னும் ஞானத்தை எசாயாவிடமிருந்து இன்று நாம் கற்றுக்கொள்கிறோம். நமக்குத் துன்பம் இழைக்கின்றவர்கள்கூட, இறைவனின் அனுமதியோடுதான் செயல்படுகின்றார்கள் என்பது ஒரு விடுதலை தரும் எண்ணம்.
மன்றாடுவோம்: தீமையையும் உமது கருவியாகப் பயன்படுத்தும் இறைவா, உம்மைப் போற்றுகிறோம். எங்கள் ஆணவத்தை அடக்கி, உம் பக்கம் எங்கள் இதயங்களைத் திருப்பவே, நீர் தீமைகளை, தோல்விகளை, அவமானங்களை எங்கள் வாழ்வில் அனுமதிக்கிறீர் என்னும் ஞானம் நிறைந்த செய்திக்காக உமக்கு நன்றி சொல்கிறோம். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
— அருட்தந்தை குமார்ராஜா