ஆண்டவரின் உயிருள்ள வார்த்தைகளே செபமாலை வடிவமாகி உள்ளன
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உலகம் முழுவதும் பேசப்பட்ட ஒரு திரைப்படம் தான் டைட்டானிக் கப்பல் பற்றிய திரைப்படமாகும். அதில் வரும் ஒரு காட்சிக்குப் பலரும் சிறப்பிடம் கொடுத்திருக்கமாட்டோம் என்பது வெளிப்படையான உண்மைதான். டைட்டானிக் கப்பல் மூழ்கிக் கொணடிருந்த வேளையில் அதில் இருந்த இயேசு சபைக் குருவும் அவரருகில் இருந்த சிறார்களும் ஒன்றாகக் கூடி செபமாலை செபித்துக் கொண்டிருந்தார்கள் என்பது வியப்பான உண்மையே.
கடந்த 6 நூற்றாண்டுகளாக மேற்கத்திய திருச்சபையில் மரியன்னைப் பக்தி முயற்சிகளில் செபமாலை சொல்வது முதன்மையிடம் பெறுகிறது. செபமாலை பக்தியின் மூலம் அக்டோபர் 7 ஆம் நாள் லெபான்றோவுக்கு அருகில் கிறிஸ்தவர்கள் துருக்கியரை தோற்கடித்து மாபெரும் வெற்றிபெற்றனர். அதன் நினைவாக அக்டோபர் 7 ஆம் திகதி செபமாலை அன்னையின் திருநாள் கொண்டாடப்படுகிறது.
அக்டோபர் மாதத்தை கிறிஸ்தவர்கள் செபமாலையின் மாதமாக அனுசரிக்கின்றனர். ஓயாமல் கிளிப் பிள்ளைப் பாடமாக அருள்நிறை மந்திரத்தைச் சொல்வது சிறுவர், சிறுமியர் அல்லது வேலை இல்லாதவர்களுக்குத்தான் பொருந்தும் என்பது ஒரு குற்றச்சாட்டு. இதற்கு திருத்தந்தை 12 ஆம் பத்திநாதர் இவ்வாறு பதில் கொடுக்கின்றார். இந்தப் பக்தியை ஒரு தவறான முறையில் புரிந்துகொண்டதனால் வரும் சிக்கல் இது.
திரும்பத் திரும்ப அருள் நிறைந்த மந்திரத்தைச் சொன்னாலும் நமது சிந்தனையெல்லாம் நமது ஆண்டவரின் பிறப்பு, வளர்ப்பு, பாடுகள், இறப்பு, உயிர்ப்பு, விண்ணேற்றம் தூய ஆவி மரியாள் மகத்துவம் பெற்றது என்பனவற்றைப் பற்றியே இருக்கிறது. என்பது தான் இந்தப் பக்தியின் சாரம். இதைப் பழக்கத்தில் கொண்டுவந்தால் நாள்தோறும் பல மணி நேரம் கூட இந்தப் பக்திக்குச் செலவிடலாம். இவ்வாறு நான் இறை இயேசுவுடனும் தூய ஆவியுடனும் மரியன்னையுடனும் உறவுகொண்டு அதில் முன்னேற்றம் அடைந்துள்ளேன்’ என்றும் கூறியுள்ளார்.
செபமாலைப் பக்தியின் திருத்தந்தை என அழைக்கப்படும் 13 ஆம் சிங்கராயர் அழகான முறையில் இவ்வாறு கூறியுள்ளார்.’ ‘செபமாலைப் பக்தி முயற்சியில் நாம் பங்கேற்கும் போது மரியன்னையின் அரவணைப்பில் நாமிருக்கிறோம். நம் தாய் மழலைகளுக்குக் கற்றுக் கொடுப்பது போல ஒவ்வொரு தேவ இரகசியமாக நமக்கு விளக்கிச் சொல்கிறார். இவ்வாறு மரியன்னையின் அரவணைப்பில் அவரைப் பார்த்தவண்ணம் நமது மீட்பைப் பற்றிய சாட்சித் தியானத்தில் பங்குபெறுகிறோம்.
இவ்வாறு இந்தப் பக்தி முயற்சி ஞான வாழ்வின் தொடக்கத்தில் இருப்போருக்கும் பொருந்தும்’ என்று புனிதசாமிநாதரையும் செபமாலைப் பக்தியையும் இணைப்பது ஆதாரமற்றதாக இருக்கலாம். ஆனால் அவர் காலத்தில் திரும்பத்திரும்ப அருள்நிறைந்த மந்திரத்தைச் சொல்வது மக்களிடம் வழக்கமாக இருந்தது.
ஆனால் இதில் இருந்து 200 ஆண்டுகள் கடந்த பின்னரே கார்த்தூசியன் சபைத் துறவிகளால் 10 மங்கள வார்த்தை செபத்தின் தொடக்கத்தில் ஆண்டவர் கற்பித்த செபமும் அதற்கு முன் தேவ இரகசியங்களும் ஓரளவுக்கு தொகுத்து சொல்லப்பட்டது. இவ்வளவு முயற்சிகளுக்குப் பின்னர் கி. பி. 1500 அளவில் தான் நாம் பின்பற்றுகின்ற செபமாலைப் பக்தி வடிவமைப்பு பெற்றது. 1716 ஆம் ஆண்டில் கிறிஸ்தவர்களுக்கும் துருக்கியருக்கும் பயங்கரப் போர் நடந்தது.
செபமாலை செபித்ததன் பயனாகக் கிறிஸ்தவர்களுக்கு அபூர்வ வெற்றியும் கிடைத்தது. இதைப் போல இன்னும் பல வெற்றிகள் கிடைத்தன. இதைக் கண்ட திருத்தந்தை செபமாலை அன்னை விழாவை ஆண்டு தோறும் கொண்டாடக் கட்டளையிட்டார். எனவேதான் செபமாலை ஜெபமாலையானது. நம்மில் பலருக்கு செபமாலை மணிகளை கையில் உருட்டும் போது நினைவுகள் எங்கெல்லாமோ உருண்டோடிக் கொண்டிருக்கும். சிலருக்கு ஏதோ அர்த்தம் புரியாத ஆன்மீகமாக இருக்கும்.
சிலருக்கு பொழுது போக்கான ஆன்மீகமாக இருக்கும். இப்பேர்ப்பட்ட தருணங்களில் நாம் வெளிப்படுத்துவது நிஜமற்ற வழிபாடும் ஆன்மீகமும் தான். இப்படி அர்த்தமற்ற ஆன்மீகத்திற்கு அடிப்படைக் காரணம் நாம் தேவ அன்னையின் ஜெபம் தரும் செபமாலையைப் பற்றிய சரியான புரிதல் இல்லாததே ஆகும். மூவொரு இறைவனையும் முக்கியமாக நம் மனித குலத்திலே வாழ்ந்தவராகவும் உள்ள இறைவன் இயேசுவையுமே மையப்படுத்துகிற இறை மகிமையை வெளிப்படுத்துகிற செபமாலையை ஏந்தி செபிப்பவர்கள் நிட்சயம் இறை அருளை அடையும் பாக்கியம் பெற்றவர்களே.
பயன்படுத்தாத இடங்களில் தூசுகள் படிவதுபோல் பக்குவப்படாத ஆன்மீகத்தில் மாசுகள் படிந்து கொண்டே இருக்கும்.செபமாலையின் மையமாக விளங்குபவர் ஆண்டவர் இயேசு மட்டுமே. செபமாலையின் தொடக்கமும் முடிவும் பாடுபட்ட சுரூபம் உணர்த்தும் ஆண்டவர் இயேசுவையே குறிக்கிறது. அருள் நிறைந்த மரியே என்ற வாழ்த்து கபிரியேல் தூதருடையது. அல்ல மாறாக பிதாவாகிய கடவுளுடையது ஆக இவ்வார்த்தைகளைச் சொல்லும் போது நாம் நம் வானகத் தந்தையோடு சேர்ந்து நம் தாயை வாழ்த்துகிறோம். செபமாலையினால் வாய் மொழி செபத்திற்கு நாம் முக்கியத்துவம் கொடுக்கின்றோம். அதற்குரிய பயனையும் அடைகின்றோம்.
முழுமையான செபமாலை ஓர் அழகான ரோஜாப் பூந்தோட்டம் போன்றது. நாம் அரைகுறையாக செபிக் கும் போது பூக்கள் இல்லாத வெறுமையான காற்றையே நாம் நம் மாதாவுக்கு சூட்டுகிறோம். விவிலியத்தில் சொல்லப்பட்டவைகளே செபத்தின் வடிவத்தில் செபமாலையாக அமைக்கப்பட்டுள்ளது. ஆகவே தினம்தோறும் சொல்வதனால் நாம் இறைவார்த்தையையும் வாசிக்கின்றோம். செபமாலை என்பது ஓர் ஆழ்ந்த ஆன்மீகச் சிந்தனை. தேவ அன்னையைப் போல நாமும் மறையுண்மைகளைத் தியானிக்கின்றோம்.