ஆண்டவரின் அனைத்துச் செயல்களே! நீங்கள் கடவுளை வாழ்த்துங்கள்
தானியேல் 1: 34, 35 – 6, 37 – 38
நெருப்பு மூன்று இளைஞர்களை தீண்டாது இருந்தபோது, கடவுளின் வல்லமையை அனுபவித்த அவர்களின் நன்றிப்பெருக்கு தான், இன்றைய நாளின் பதிலுரைப்பாடலாக நமக்குத் தரப்பட்டுள்ளது. ஆண்டவர் செய்த செயல்கள் ஆண்டவரைப் போற்ற வேண்டும் என்கிற தங்களது விருப்பத்தை, அந்த மூன்று இளைஞர்களும் வெளிப்படுத்துகிறார்கள். இது சற்று வித்தியாசமானதாக இருப்பதை நாம் உணரலாம். படைப்புக்களை கடவுளைப் போற்றச் சொல்லி அழைப்புவிடுப்பதைப் பார்த்திருக்கிறோம், இறைவனின் அருளை உணர்ந்த மனிதர்களுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இறைவனது செயல்களை கடவுளைப் போற்றுவதற்கு விடுக்கப்படும் அழைப்பு புதுமையானது.
அடுக்கடுக்கான வார்த்தைகளைப் பேசி மக்களை கவர்ந்த தலைவர்கள் இருக்கிறார்கள். இன்றைக்கு இருக்கிற அரசியல்வாதிகள் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. பேச்சு மட்டும் தான், அவர்களின் மூலதனம். தங்களுடைய பேச்சுக்கு தாங்கள் பொறுப்பேற்க வேண்டும் என்பதெல்லாம் கிடையாது. வாயில் என்ன வருகிறதோ, அதை அப்படியே பேசிவிடுகிறார்கள். இவர்களை மக்கள் மதிப்பதும் கிடையாது. ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்வதும் கிடையாது. ஆனால், அமைதியாக இருந்து, காரியம் சாதிக்கும் தலைவர்களும் இருக்கிறார்கள். இவர்களது செயல்கள் தான், அவர்களின் அடையாளங்கள். அந்த செயல்கள் தான், அவர்களது பெருமைக்கு சான்று பகரும் தூண்கள். கடவுள் பல நன்மையான செயல்களைச் செய்திருக்கிறார். அத்தனை செயல்களையும் நாம் நினைத்துப் பார்த்து, கடவுளைப் போற்றுவதுதான் அவருக்கு பெருமை சேர்க்கிற காரியங்கள் என்று, அந்த மூன்று இளைஞர்கள் உணர்ந்ததை அறிவிக்கிறார்கள்.
நம்முடைய வாழ்விலும், கடவுள் எவ்வளவோ நன்மையான காரியங்களைச் செய்திருக்கிறார். அந்த செயல்களை நாம் எப்போதும் நினைத்துப் பார்ப்போம். அந்த செயல்களுக்காக கடவுளுக்கு நன்றி செலுத்துவோம். கடவுளைப் போற்றிப் புகழ்வோம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்