ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்
திருப்பாடல் 85: 8அஆ – 9, 10 – 11, 12 – 13
இன்றைக்கு எத்தனை பேர் இறைவன் பேசுவதைக் கேட்கிறோம்? இது மிகப்பெரிய கேள்விக்குறி. இன்றைக்கு நாம் ஒவ்வொருவருமே நம்முடைய குரலை இறைவன் கேட்க வேண்டும் என்று விரும்புகிறோம். நம்முடைய வாழ்வில் நாம் சந்திக்கிற சிக்கல்கள், சவால்கள், துன்பங்கள் ஆகியவற்றை இறைவன் கேட்க வேண்டும், நம்முடைய குறைகளுக்கு பதில்மொழி தர வேண்டும் என்று மன்றாடுகிறோம். இறைவன் பேசுவதை கேட்பதற்கு முயற்சி செய்வதும் கிடையாது. அதில் நமக்கு ஆர்வமும் கிடையாது.
வாழ்க்கையில் துன்பங்கள் வருகிறபோது, நாம் கடவுளிடம் வருகிறோம். நம்முடைய எண்ணங்களை முறையிடுகிறோம். ஆனால், இந்த துன்பங்கள் நம்மை நெருங்காமல் இருப்பதற்கு, நாம் முயற்சி செய்வதே கிடையாது. அதனை ஒரு பொருட்டாக எண்ணுவதும் கிடையாது. நாம் பேசுவதைத்தான் கடவுள் கேட்க வேண்டும் என்று விடாப்பிடியாக இருக்கிறோம். இன்றைக்கு யாரெல்லாம், கடவுளுடைய குரலுக்கு செவிகொடுத்தார்களோ, அவர்களைத்தான் நாம் புனிதர்கள் என்று போற்றுகிறோம். இறைவாக்கினர்களாக மதிக்கிறோம். இதுதான் நம்முடைய வாழ்விற்கும், புனிதர்களின் வாழ்விற்குமான நீண்ட இடைவெளியாக இருக்கிறது. இந்த இடைவெளியைக் குறைக்க கடவுளின் குரலுக்குச் செவிமடுக்க வேண்டும்.
நம்முடைய வாழ்வில் செபிக்கிறபோது, பேசுவதைக் குறைத்துவிட்டு, கடவுள் நம்மிடமிருந்து என்ன விரும்புகிறார்? கடவுளின் எதிர்பார்ப்பு என்ன? கடவுள் நம்மை எப்படி வாழ வேண்டும்? என்று அழைப்புவிடுக்கிறார் என்று தியானித்துப்பார்ப்போம். நல்ல எண்ணத்தோடு, நல்ல சிந்தனையோடு கடவுளைத் தேடுகிறபோது, நிச்சயம் இறைவனின் அருளும், ஆசீரும் நமக்கு நிறைவாகக் கிடைக்கும்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்