ஆண்டவராம் இறைவன் உரைப்பதைக் கேட்பேன்
திருப்பாடல் 85: 8ab, 9, 10 – 11, 12 – 13
கேட்கக்கூடிய பழக்கம் இன்றைய நவீன தலைமுறையினரிடத்தில் குறைந்து கொண்டே வருகிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு குடும்பத்தின் பெரியவர்கள் அந்த குடும்பத்தை வழிநடத்தி வந்தார்கள். அவர்களின் பேச்சுக்கு மறுபேச்சு இருக்காது. சரியா? தவறா? என்கிற விவாதமெல்லாம் அங்கே கிடையாது. அந்த குடும்பத்தின் பெரியவர் சொல்லுக்கு அனைவரும் கட்டுப்பட்டார்கள். அவருக்குரிய மரியாதையைக் கொடுத்தார்கள். இன்றைக்கு நாம் வாழக்கூடிய உலகத்திற்கு, இதுபோன்ற நிகழ்வுகள் ஆச்சரியமளிக்கக்கூடிய நிகழ்வுகள். ஏனென்றால், இது போன்ற நிகழ்வுகளை இப்போது கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
இன்றைய திருப்பாடலில், நாம் அனைவரும் இறைவனின் குரலுக்கு செவிமடுக்க வேண்டும் என்கிற செய்தி நமக்குத் தரப்படுகிறது. இறைவன் தான் நமக்கு எல்லாமுமாக இருக்க வேண்டும். இறைவனின் குரலுக்கு, நம்முடைய முதுபெரும் தந்தை ஆபிரகாம் எப்படி பணிந்தாரோ, அதேபோல நாமும் பணிந்து நடக்க வேண்டும் என்பதை, இது தெளிவுபடுத்துகிறது. இறைவனின் குரலுக்கு கீழ்ப்படிந்து நடப்பவர்களுக்கு இறைவன் பல்வேறு விதமான ஆச்சரியங்களையும் அதிசயங்களையும் செய்கிறார். இறைவனின் மீட்பு நமக்கு உறுதிப்படுத்தப்படுகிறது. அவருடைய குரலுக்கு எந்நாளும் செவிமடுக்கிற மக்களாக வாழ, நாம் முயற்சி செய்ய வேண்டும்.
இறைவனின் குரலுக்கு செவிமடுப்பது என்பது எளிதான காரியமல்ல. அதனை வாழ்வாக்க முற்படுகிறபோது, நாம் பல்வேறு விதமான எதிர்ப்புக்களையும், சோதனைகளையும் சந்திக்க நேரிடும். ஆனால், அவற்றை தாங்குவதற்கான வல்லமையை இறைவன் தருவார் என்கிற உறுதியான நம்பிக்கையோடு, நாம் இறைவனின் குரலுக்கு செவிமடுப்போம்.
– அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்