ஆண்டவரது வியத்தகு செயல்களுக்காய் புதியதோர் பாடல் பாடுங்கள்
திருப்பாடல் 98: 1, 2 – 4, 5 – 6
பாடல் பாடுவது என்பது ஒருவரை மகிமைப்படுத்துவதற்கு சமம். பிறந்தநாளில் ஒருவரைப்பற்றி வாழ்த்த வேண்டும் என்றால், பாடல் வழியாக வாழ்த்துகிறோம். நமது உள்ளத்தில் இருக்கக்கூடிய சிந்தனைகளை, இசைமீட்டி, ஒருவரது சிறப்பையும், நன்றி உணர்வையும் வெளிப்படுத்துகிறோம். திருப்பாடல் ஆசிரியர் புதியதொரு பாடல் பாடச்சொல்கிறார். ஏன்? கடவுள் அந்த அளவுக்கு, வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார். அவர் செய்திருக்கிற செயல்களுக்காக, பாடல் பாடச்சொல்கிறார்.
கடவுள் என்ன வியத்தகு செயல்களை, இஸ்ரயேல் மக்களுக்குச் செய்திருக்கிறார்? இஸ்ரயேல் மக்கள் பெற்ற வெற்றி அனைத்தையும், அவர்கள் தங்களது புயவலிமையினால் பெற்றதாகச் சொல்ல மாட்டார்கள். ஏனென்றால், அது அவர்களால் இயலாத காரியம். தாங்கள் போரிடச் சென்ற பகைநாட்டினா் அனைவருமே, போர்த்தந்திரத்தில் சிறந்தவர்கள். பல போர்களைச் சந்தித்தவர்கள். பல போர்களில் வெற்றிவாகைச் சூடியவர்கள். புதிய போர்முறைகளை அறிந்தவர்கள். இப்படிப்பட்ட வலிமைமிகுந்தவர்களை வெல்ல வேண்டுமானால், நிச்சயம் எதிர்க்கிறவர்கள் அவர்களை விடச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும். அந்த திறமையோ, ஆற்றலோ இஸ்ரயேல் போர் வீரர்களிடத்தில் கிடையாது. ஆனாலும், அவர்கள் வெற்றிபெற்றார்கள் என்றால், அதுதான் ஆண்டவர் செய்த வியத்தகு செயல்களாகப் பார்க்கப்பட்டது.
நமது வாழ்க்கையிலும் ஆண்டவர் நமக்கு வியத்தகு செயல்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். நமது பலத்தில் அல்லாமல், கடவுளின் பலத்தில பல அதிசயமான காரியங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் செய்யக்கூடிய காரியங்களை நினைத்துப்பார்த்து, அவருக்கு நாம் நன்றி சொல்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்