ஆண்டவரது உடன்படிக்கையைக் கடைப்பிடிப்போருக்கு பேரன்பு நிலைத்திருக்கும்
திருப்பாடல் 103: 13 – 14, 15 – 16, 17 – 18
பழைய ஏற்பாட்டிலே கடவுள் இஸ்ரயேல் மக்களோடு ஏழு உடன்படிக்கைகளைச் செய்துகொண்டார் என்று விவிலிய அறிஞர்கள் கருதுகிறார்கள். கடவுள் நமது முதல் பெற்றோரோடு செய்து கொண்டது முதல் உடன்படிக்கை. தொடக்கநூல் முதல் அதிகாரத்தில் கடவுள் மனிதர்களைப் படைத்து, இந்த உலகத்தை அவர்களது பராமரிப்பில் விட்டுவிடுகிறார். இரண்டாவதாக, நோவாவோடு கடவுள் உடன்படிக்கைச் செய்துகொள்கிறார். இனிமேல் இந்த மண்ணகத்தை நீரால் அழிக்க மாட்டேன் என்று உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். மூன்றாவதாக, ஆபிரகாமோடு கடவுள் உடன்படிக்கைச் செய்து கொள்கிறார். ஆபிரகாமுக்கு பல வாக்குறுதிகளைக் கடவுள் கொடுக்கிறார். ஆபிரகாம் வழியாக இஸ்ரயேல் மக்களுக்கும் அவா் வாக்குறுதிகளைக் கொடுக்கிறார். நான்காவதாக, அவர் இஸ்ரயேல் மக்களோடு செய்துகொண்ட உடன்படிக்கை ”பாலஸ்தீன அல்லது நில உடன்படிக்கை” என்று அழைக்கப்படுகிறது. இது இணைச்சட்டம் 30: 3 – 4 ல், தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. கடவுள் உலகின் அனைத்து மூலைகளிலும் இருக்கிற மக்களை ஒன்று சேர்ப்பார் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
ஐந்தாவது, மோசே வழியாக செய்து கொண்ட உடன்படிக்கை. இந்த உடன்படிக்கை பத்துக்கட்டளைகளை மையமாக வைத்து, இஸ்ரயேல் மக்கள் வாழ வேண்டிய நெறிமுறைகளை வகுத்து தருவதாக அமைந்திருக்கிறது. ஆறாவது உடன்படிக்கை, கடவுள் தாவீது வழியாக செய்து கொண்ட உடன்படிக்கை. தாவீதின் வழிமரபில் வரக்கூடியவர் வழியாக மீட்டெடுக்கக்கூடிய வாக்குறுதியைக் கடவுள் தருகிறார். இது 2சாமுவேல் 7: 8 – 16 ல் தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. எரேமியா 31: 31 ல் ஏழாவது உடன்படிக்கையைப் பார்க்கிறோம். புதிய உடன்படிக்கையாக, இதயத்தில் எழுதப்படும் உடன்படிக்கையாக இது பார்க்கப்படுகிறது. இந்த உடன்படிக்கைகளை இரண்டு வகைகளாக நாம் பிரிக்கலாம். நிர்பந்தமுள்ள உடன்படிக்கை, நிர்பந்தமில்லாத உடன்படிக்கை. நிர்பந்தமுள்ள உடன்படிக்கையின்படி, இஸ்ரயேல் மக்கள் உடன்படிக்கையைக் கடைப்பிடித்தால் அவர்கள் ஆசீர்வதிக்கப்படுவார்கள். மீறினால், தண்டிக்கப்படுவார்கள். ஆனால், நிர்பந்தமில்லாத உடன்படிக்கையில், கடவுள் என்றும் பிரமாணிக்கமாய் இருப்பார். ஒருவேளை, இஸ்ரயேல் மக்கள் மீறினாலும், கடவுள் உண்மையுள்ளவராய் இருப்பார் என்பதைக் காட்டுவதாக அமைகிறது.
கடவுள் நாம் எந்நாளும் அவருடைய பிள்ளைகளாக, நேர்மையானவர்களாக, உண்மையுள்ளவர்களாக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். அப்படி வாழுகிறபோது, கடவுள் நம்மோடு அருட்சாதனங்கள் வழியாக, உடன்படிக்கை செய்துகொண்டதை நினைத்து மகிழ்ச்சியடைகிறார். அந்த மகிழ்ச்சியை நாம் கடவுளுக்குக்கொடுப்போம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்