ஆட்சியைப் பிடிக்கனுமா? அரியணை வேண்டுமா?
மத்தேயு 19:23-30
இறையேசுவில் இனியவா்களே! நம்பிக்கையோடும் ஆர்வத்தோடும் திருப்பலிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
ஆட்சி, அரியணை இந்த இரண்டு வார்த்தைகளைக் கேட்கும்போதே நம் மனதிற்குள்ளே மகிழ்ச்சி ஊறுகிறது. எப்போது இவைகள் நமக்கு கிடைக்கும் என்ற ஏக்கம் அதிகமாகவே உள்ளது. இன்றைய நற்செய்தி வாசகம் இந்த ஏக்கத்தைப் போக்கி வைக்கிறது.
பேதுரு, ஆண்டவர் இயேசுவைப் பார்த்து நாங்கள் எல்லாவற்றையும் விட்டுவிட்டு உம்மைப் பின்பற்றியவர்களாயிற்றே, எங்களுக்கு என்ன கிடைக்கும்? என்றுக் கேட்டபோது ஆண்டவர் இயேசு கிறிஸ்து இரண்டு விதமான வாக்குறுதிகளை வழங்குகிறார்.
வாக்குறுதி 1:
உங்களுக்கு விண்ணக ஆட்சி கிடைக்கும். மேலும் அந்த ஆட்சியிலே நீங்கள் அரியணையில் இருப்பீர்கள் என்கிறார் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அந்த ஆட்சி நிரந்தரமான ஆட்சி. அங்கு அரியணை உண்டு. அந்த அரியணைக்கு முடிவே இராது.
வாக்குறுதி 2:
ஆண்டவரைப் பின்பற்றுகிற ஒவ்வொரும் கண்டிப்பாக இழக்க வேண்டும். கோதுமை மணி மண்ணில் மடிந்து மடிந்தால் தான் பலன் தர முடியும். அதே போன்று கிறி்ஸ்துவைப் பின்பற்றுகிறவர்கள் இழப்பார்கள். ஆனால் மறுமையில் நூறுமடங்காக திரும்ப பெறுவர். இழந்த அனைத்தையும் ஒரு மடங்கல்ல நூறு மடங்கு திரும்ப பெறுவர். அதோடு நிலைவாழ்வை உரிமையாகப் பெறுவர்.
மனதில் கேட்க…
1. எனக்கு இயேசு தரும் ஆட்சி, அரியணை வேண்டுமா? அல்லது உலகம் தரும் ஆட்சி, அரியணை வேண்டுமா?
2. உலகத்தில் பதவிக்காக, பதவிக்காக போட்டி போடுவதை நான் தவிர்க்கலாமே?
மனதில் பதிக்க…
என் பணிக்காக பரிசு என் கடவுளிடம் இருக்கின்றது (எசா 49:4)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா