ஆச்சரியமான அன்பு வாழட்டும்!!!
லூக்கா 3:1-6
இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு அன்பின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நாம் அன்போடு இருக்க வேண்டும், அன்பை பரப்ப வேண்டும், அன்பின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் இரண்டாம் ஞாயிறு வந்திருக்கிறது.
அன்பு என்பது நவீனகாலத்தில் எப்படி இருக்கிறது என்பதை இந்த நகைச்சுவைகள் சுட்டிக்காட்டுகின்றன. உண்மையில் அன்பு என்பது என்ன? அன்பு என்ற வார்த்தைக்கு நிகரேது. அதனால்தான் அன்பின் பெருமையை எடுத்துக்கூறும் விதமாக திருவள்ளுவர் அன்புடைமை பற்றி தனி அதிகாரமே எழுதியுள்ளார். அன்பில் இடைவெளி விழுவதால்தான் கணவன் மனைவி இடையே பிரிவினை ஏற்படுகிறது. பந்தங்கள் பலவீனமடைகின்றன. அதனை அன்பின் மூலமாக மட்டுமே சரி செய்ய முடியும்.
தூய அன்புடன் உணர்வுப்பூர்வமான உறவை உருவாக்க அன்புகாட்டுதல், அக்கறை கொள்ளல், புரிந்து கொள்ளல், மதித்தல், பாராட்டுதல், ஏற்றுக்கொள்ளல், நம்பிக்கை வைத்தல் போன்ற 7 பண்புகள் வேண்டும் என்கிறார் ஜான்கிரே. தியாகம் செய்வது தன்னலமற்ற அன்பாகும். அன்பு என்பது ஒன்றிணைக்கும் மனோபாவம். இரண்டு தனித்தீவுகளை இணைக்கும் உறவுப்பாலம். பயமுறுத்தினாலும் பணியாது அன்பு. சிறைப்படுத்தினாலும் இணங்காது, துக்கத்தை வெல்லும் தன்மையுடையது அன்பு.
நாம் கொள்ளும் அன்பு பிறரில் வியப்பை உருவாக்க வேண்டும். நம்முடைய சுயநலமற்ற அன்பால் ஆச்சரியத்தை உருவாக்க வேண்டும். அந்த ஆச்சரியமான அன்பு அதிசயத்தை உருவாக்கும். அந்த அதிசயமான அன்புதான் மாற்றத்தை உருவாக்கும். இன்று நாம் மறையுரையிலே மூன்று ஆச்சரியமான அன்புகளை அலசி ஆராய்ந்து நாமும் அந்த வகையிலே வர அதற்காக பெருமுயற்சி எடுக்க அழைக்கப்படுகிறோம். வாருங்கள்.. வாழ்ந்துக்காட்டுவோம்.
1. கத்தோலிக்க திருச்சபை தலைவரின் அன்பு
திருச்சபையின் தலைவர் யார்? ஆண்டவர் இயேசு கிறிஸ்து. அவரின் அ்னபு ஆச்சரியமான அன்பு. அகிலத்தையே அரவணைத்த அன்பு. யோவான் நற்செய்தி 13:34ல் இயேசு, “ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்னும் புதிய கட்டளையை நான் உங்களுக்குக் கொடுக்கிறேன். நான் உங்களிடம் அன்பு செலுத்தியது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு செலுத்துங்கள்” என்று சொல்கிறார்.
அன்புக் கட்டளை ஒன்றைப் பிறப்பிக்கிறார். அன்பு என்ற வார்த்தையை பலமுறை நாம் கேட்டு கேட்டுப் பழகியதால், அது ஒரு சலிப்புத் தன்மையை நமக்கு ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம். அந்தளவிற்கு அன்பைப் பற்றிப் பேசாதவர்கள், எழுதாதவர்கள், கேட்காதவர்கள, தியானிக்காதவர்கள் இருக்க முடியாது. அதனாலோ என்னவோ அது மேலோட்டமாகவே உணரப்படுகிறது. இயேசுவின் அன்பின் ஆழத்தை நாம் புரிந்து கொள்வது கடினமே.
பணத்துக்கு ஆசைப்பட்டு, தன் குருவையே காட்டிக்கொடுத்த யூதாசையும் அன்பு செய்ய அவரால் முடிந்தது. துன்பத்திற்குப் பயந்து தன்னை மறுதலித்த பேதுருவையும், அதிகாரத்திற்குப் பயந்து தன்னைவிட்டு ஓடிப்போன சீடர்களையும் மீண்டும் தேடித் தேடி சென்று அரவணைக்க முடிந்தது. தன்னை ஈட்டியால் குத்தியவர்களையும் சாட்டையால் அடித்தவர்களையும், தன் ஆடையை அகற்றியவர்களையும், கன்னத்தில் அடித்தவர்களையும், காயப்படுத்தியவர்களையும் இவர்கள் அறியாமல் செய்கிறார்கள் என்று எப்படி சொல்ல முடிந்தது? என்பதை நினைக்கும்போதே நமக்கு மிகவும் வியப்பாக இருக்கிறது. அவரின் ஆச்சரியமான அன்பு அனைவருக்கும் ஆச்சரியமான பாடம். அந்த பாடத்தை நாம் கண்டிப்பாக படித்தே தீர வேண்டும்.
2. கத்தோலிக்க திருச்சபை வழிகாட்டியின் அன்பு
உலக வறியோர் நாளன்று, வத்திக்கானின் புனித ஆறாம் பவுல் அரங்கில், ஏறத்தாழ 1,500 வறியோருடன் அமர்ந்து உணவருந்தினார், திருத்தந்தை பிரான்சிஸ். நண்பகல் மூவேளை செப உரையை நிறைவு செய்தபின், புனித ஆறாம் பவுல் அரங்கில் நுழைந்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அங்கு, மதிய உணவை ஏற்பாடு செய்தோருக்கும், பரிமாறுவோருக்கும் நன்றியுரைத்ததோடு, அங்கு குழுமியிருந்த அனைத்து வறியோரையும் வரவேற்பதாகவும் கூறினார்.
1,500 வறியோர் குழுமியிருக்க, 70 தன்னார்வப் பணியாளர்கள், இத்தாலிய உணவு வகையான இலசாஞ்ஞா, கோழிக்கறி, உருளைக் கிழங்கு கூட்டு, திராமிசு என்ற இனிப்பு ஆகியவற்றை அவர்களுக்கு பரிமாறினர். மதிய உணவை வறியோருடன் உண்டபின் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை நன்றி சொல்லி, அங்கிருந்த குழந்தைகளையும், வறியோரையும் வாழ்த்திய திருத்தந்தை, இவ்வுணவை தயாரித்த சமையல்காரர்களுடன் புகைப்படம் ஒன்றும் எடுத்துக் கொண்டார். அவ்விருந்தில் கலந்துகொண்ட வறியோர் ஒவ்வொருவருக்கும், ஒரு கிலோ பாஸ்தா பொட்டலம் ஒன்றையும் பரிசாக வழங்கினார், திருத்தந்தை பிரான்சிஸ். ஏறத்தாழ, ஒருமணி 25 நிமிடங்கள், வறியோருடன் செலவிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மகிழ்ச்சியுடன் தான் தங்கியிருக்கும் சாந்தா மார்த்தா இல்லம் சென்றார்.
இந்த நிகழ்வு கத்தோலிக்க திருச்சபையின் வழிகாட்டியான திருத்தந்தை பிரான்சிஸின் ஆச்சரியமான அன்பை நமக்கு எடுத்துக்காட்டுகிறது. அவரைப்போன்று அதிகாரத்தில் இருக்கும் நாம் நம்மிடம் இருக்கும் அதிகாரத்தை ஆச்சரியமான அன்பிற்காக பயன்படுத்த வேண்டும். நம்மிடம் வேலை செய்யும் அனைவருக்கும் இந்த ஆச்சரியமான அன்பை வழங்க வேண்டும். நம்முடைய அன்பு அதிசயம் செய்ய வேண்டும்.
3. கத்தோலிக்க திருச்சபை குடும்பத்தின் அன்பு
ஒரு கணவன் மனைவி அவர்களுக்கு திருமணமாகி கிட்டத்தட்ட 5 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. அவர்கள் வேண்டாத கோயில் இல்லை. ஆண்டுகள் ஆனதே தவிர அவர்களின் வேண்டுதலை இறைவன் கேட்காமல் இல்லை. 5 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. கணவன் மனைவி இருவரும் அந்த குழந்தையின் வரவால் மிகவே மகிழ்ந்தனர்.
ஒருநாள் கணவர் அலுவலகத்திற்கு செல்லும்போது, “என்னம்மா ராணி, குழந்தையை பத்திரமாக பாத்துக்கோ, நான் ஆபீசுக்குப் போறேன்” என்று சொல்லிவிட்டு அவர் சென்றார். அவர் போன சிறிது நேரத்தில் அவர் மனைவி சமையலறைக்குச் சென்று வேலைகள் செய்ய தயாரானர். குழந்தை விளையாடிக் கொண்டிருந்தது. கொஞ்ச நேரம் கழித்ததும் விளையாடிய குழந்தை அங்கிருந்த ஒரு மருந்து பாட்டிலை எடுத்து குடித்தது. அதிகமாக குடித்ததால் வாயில் நுரை தள்ளி அந்த இடத்திலே அந்த குழந்தை பேச்சு மூச்சு இல்லாமல் இருந்தது. சமையலறையிலிருந்து வந்த மனைவி அதைப் பார்த்து செய்வதறியாமல் திணறிப்போய் அக்கம் பக்கத்தாரை அழைத்து குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றார். மருத்துவர்கள் பரிசோதனை செய்து விட்டு குழந்தை ஏற்கனெவே இறந்துவிட்டது என்ற துயரச்செய்தியைச் சொன்னார்கள். மனைவி அலறினாள். கத்தி கதறினாள். என் கணவருக்கு என்ன சொல்வேன் என்று திகைத்தாள்.
தகவலறிந்த கணவன் அலுவலகத்திலிருந்து வேகமான ஓடிவந்தான். வந்தவன் என் மனைவி எங்கே? என்றுக் கேட்டான். உன் மனைவி ஒரு மூலையில் அழுதுக்கொண்டு இருக்கிறாள் என்று சொன்னார்கள். தன்னைப் பார்த்து கத்துவான், நிலைமை புரியாமல் தன்னை பழித்துரைப்பான் என்று எண்ணினாள் மனைவி. ஆனால் கணவனோ, அவள் தோள் மேல் வைத்து “நான் உன்னை அன்பு செய்கிறேன்” உன் மேல் எந்த தவறும் இல்லை. தெரியாமல் நடந்து விட்டது என்று எண்ணி அவளை அரவணைத்தான். மனைவி அவனின் அன்பின் வியந்து பேச வார்த்தைகள் இல்லாமல் நின்றாள்.
இந்த குடும்பம் மற்ற குடும்பங்களுக்கெல்லாம் முன்உதாரணமாக திழ்கின்றது. சிறு சிறு குறைகளை வைத்து நம் அன்பை இன்னும் செலவழிக்காமல் இருந்தால் இந்த தருணம் நம் அன்பை தாராளமாக செலவழிக்க சொல்கிறது. அன்பை அள்ளி வழங்குவோம். அன்பால் குடும்பத்திலுள்ள ஒவ்வொரு நபர்களையும் ஆச்சரியப்படுத்துவோம். வாழ்க்கையை அழகாக்வோம்.
மனதில் கேட்க…
1. என்னுடைய அன்பு ஆச்சரியப்படுத்தும் அன்பா?
2. மறையுரையில் கேட்ட மூவரையும் பின்பற்றி வாழ்ந்து பிறரை ஆச்சரியப்படுத்த எனக்கு ஆசை உண்டா?
மனதில் பதிக்க…
அன்புக்குப் பொறாமையில்லை; அன்பு தன்னைப் புகழாது, இறுமாப்பாயிராது (1கொரி.13:4)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா