அவர்கள் உயிரைச் சாவினின்று காக்கின்றார்
திருப்பாடல் 33: 1 – 2, 4 – 5, 18 – 19
கடவுள் எல்லா மனிதர்களையும் இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக அழைப்புவிடுக்கிறார். கடவுளின் அழைப்பு எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கிறது. இந்த அழைப்பை ஏற்று, கடவுளின் வழியில் நடக்கிறவர்கள் தான், ஆண்டவருக்கு அஞ்சி நடக்கக்கூடியவர்களாக வாழ்கின்றனர். எப்போது நாம் கடவுளின் பணிக்காக நம்மை முழுமையாகக் கையளித்து, அதில் அர்ப்பணம் உள்ளவர்களாக வாழ ஆரம்பிக்கிறோமோ, அப்போது நாம் கடவுளின் உடைமையாக மாற ஆரம்பிக்கிறோம். கடவுளின் பிள்ளைகளாக நமது வாழ்வு தொடங்க ஆரம்பிக்கிறது.
கடவுளின் பணியை நாம் செய்ய தொடங்கிய பிறகு, கடவுள் நமக்கான திட்டத்தை வகுக்கிறார். நம்முடைய ஒவ்வொரு அசைவிலும், அவரது வழிநடத்துதல் இருக்கிறது. அதிலும் சிறப்பாக, கடவுளின் பாதுகாப்பு நமக்கு நிறைவாகக் கிடைக்க ஆரம்பிக்கிறது. ஒரு சில சாதாரண மனிதர்கள், ஆனால் கடவுள் அஞ்சி வாழ்ந்தவர்கள் செய்த சாதனைகளைப் பார்க்கிறபோது, கடவுளின் வல்லமையும், பாதுகாவலும் எந்த அளவுக்கு அவர்களை வழிநடத்துவதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதை நம்மால் உணர்ந்து கொள்ள முடியும். அதுதான் கடவுளின் வழிகாட்டுதல். அதுதான் அவரது அன்பு.
நாம் சாதாரண மனிதர்களுக்கு பணி செய்கிறபோதே, எவ்வளவு பாதுகாப்பை உணர்கிறோம். அப்படியென்றால், கடவுளின் பணியாளர்களாக நாம் உழைக்கிறபோது, எந்த அளவுக்கு நாம் நிறைவோடு பணி செய்ய வேண்டும் என்பதை, இந்த திருப்பாடல் நமக்கு உணர்த்துகிறது. அதுமட்டுமல்ல, கடவுளின் பாதுகாப்பு நம்மோடு இருக்கிறது என்பதை, இது முழுமையாக நமக்கு வெளிக்காட்டுகிறது.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்