அவருக்குரிய ‘ஒன்று’
லூக் 6 : 36 -38
இத்தவக்காலத்தில் மட்டுமல்லாது நம் ஒவ்வொரு ஆன்மீக முயற்சியும் பயிற்சியும் நம்மை புனித நிலைக்கு அழைத்துச் செல்வதே குறியாக இருக்கின்றது. கடவுள் நிலையிலிருந்து மனித நிலைக்கு தன்னை தாழ்த்தி இவ்வுலகிற்கு வந்த இறைமகனின் நோக்கமே, மனித நிலையிலிருந்த நம்மை அவருடைய மாண்புமிக்க, மாட்சிமிகுநிலைக்கு உயர்த்துவதே. புனித அத்தனாசியூஸ், “நாம் அனைவரும் அவரின் தெய்வீகத்தில் பங்கு பெறவே அவர் மனிதரானார்.” ;என்கிறார்.
பாவத்தைத்தவிர அனைத்திலும் அவர் நம்மைப்போலவே சோதிக்கப்பட்டார் (எபி 4:15) என்று இறைவார்த்தையும் கூறுகின்றது. திருப்பலியில் திருத்தொண்டர் சொல்லக்கூடிய முக்கியமான செபங்களில் ஒன்று இயேசு மனிதனாக வந்த நோக்கத்தை எடுத்துக்கூறுவதாக அமைக்கின்றது. காணிக்கைப் பொருட்களை திருப்பலியில் படைக்கும் பொழுது இரசத்தோடு ஒரு சொட்டு நீரினை சேர்க்கும் பொழுது திருத்தொண்டர் பின்வருமாறு கூறுவார், “கிறிஸ்து நமது மனித இயல்பில் பங்கு கொள்ள திருவுளம் ஆனார். இத்தண்ணீர், இரசம் இவற்றின் மறைபொருள் வழியாக நாமும் அவருடைய இறையியல்பில் பங்கு பெறுவோமாக.” (இரசம் அவரின் தெய்வீகக்குணத்தையும் தண்ணீர் நமது மனித இயல்பையும் குறிக்கின்றது.) ஆக மொத்தமாக திருப்பலியும் அனைத்து ஆன்மீக முயற்சியின் நோக்கமும் நாம் அவரது இறையியல்பில் பங்குபெறுவதைச் சார்ந்தே இருக்கின்றது.
எவ்வாறு இயேசு பாவம் தவிர மற்ற அனைத்திலும் மனிதரானாரோ, அதனைப் போல நாமும் ‘ஒன்றை’ மட்டும் தவிர மற்ற அனைத்திலும் இறைவனின் இயல்பான மன்னிப்பு, இரக்கம், கனிவு, தாழ்ச்சி, அன்பு என்று அனைத்திலும் அவரைப்போல மாற முயலவேண்டும். அது என்ன அந்த ‘ஒன்று’. கடவுளின் இயல்புகள் அனைத்தையும் நாம் நமதாக்குவதில் என்ன பிரச்சனை என்ற கேள்வி எழலாம். அந்த ‘ஒன்று’ மட்டும் கடவுளுக்குரியது. அதனையே இன்றைய நற்செய்தி கூறுகின்றது. “பிறரைத் தீhப்பிடாதீர்கள்” இதனை உணர்ந்தவர்களாய் பிறரை தீர்;ப்பிடுவதை அவரிடம் விட்டுவிட்டு மற்ற அனைத்திலும் அவராகவே மாறுவோம் இத்தவக்காலத்தில்.
– திருத்தொண்டர் வளன் அரசு