அவரின் மனநிலை
யோவான் 18: 1- 19 : 42
எத்தனையோ மக்கள் தம் உயிரைப் பிறர்க்கெனக் கொடுத்துள்ளார்கள். எத்தனையோ நாட்டுத் தலைவர்கள் தனது நாட்டு மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்திருக்கிறார்கள். ஆனால் எவரது இரத்தமும் பாவக் கறைகளைக் கழுவியதாக வரலாறு இல்லை. பலருக்காக ஒருவர் இறந்த சரித்திரம் இல்லை. ஆனால் ஆண்டவரின் இரத்தமே “பலருடைய பாவங்களுக்காகச் சிந்தப்படும் இரத்தம்” (மத்தேயு 26:29). நம்மை நீதிமான்களாக்கிய இரத்தம் (உரோ 5:9). விலை மதிக்கப்படாத இரத்தம் (1பேதுரு 1:19). கல்வாரியில் பெரிய வெள்ளியன்று சிந்தப்பட்ட இவ்விரத்தமே நம்மை மீட்கும் இரத்தம். இந்த இரத்தம்தான் நம் அடிமைத்தனத்தை மாற்றி எழுதியது. இப்படி இயேசு மக்கள் அனைவரையும் கடவுளுக்கு முன்பாக தனது சிலுவையின் மூலமாகக் கூட்டிச் சேர்த்தார். அவருக்கு முன் நிற்கத் தகுதியுள்ளவர்களைத் தரம் உயர்த்தினார்.
அநியாயக் குற்றம் சுமத்தி இயேசுவை சிலுவையில் அறைந்தார்கள். சுமத்தப்பட்ட குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்பதை பிலாத்து உணர்ந்தான். எனினும் சாட்டையால் அடிக்கக் கட்டளையிட்டான். இயேசுவின் தலையில் முள்முடி சூட்டி, சிகப்புப் போர்வைப் போர்த்தி, மரக்கட்டையில் அமர்த்தி, கோலால் தலையில் அடித்து, இவரைப் போலி அரசரெனக் கேலி செய்தனர் போர் வீரர்கள். உருக்குலைந்து நிற்கும் திருக்குமாரனை, “இதோ மனிதன்” என்று கூறி அடையாளம் காட்ட வேண்டிய நிலையில் இருந்தார் இயேசு. அவரைக் கொல்ல வேண்டுமென கொக்கரித்தது கூட்டம். “அவரிடம் ஒரு குற்றமும் நான் காணவில்லை” என்று கூறிச் சிலுவைத் தீர்ப்பிட்டான் பிலாத்து. இதுவரை உலகில் நீதிமன்றங்கள் அளித்தத் தீர்ப்புகளில் மிகவும் அநீதியான தீர்ப்பு இது.
அந்நிலையிலும் தன்னைக் காட்டிக் கொடுத்தவருக்காக, மறுதலித்தவர்களுக்காக, விட்டுவிட்டு ஓடியவர்களுக்காக, ஏளனம் செய்தவர்களுக்காக, ஆடையைக் குலுக்கல் போட்டுப் பிரித்தவர்களுக்காக, தன்னைச் சாட்டையால் அடித்தவர்களுக்காக, தன்னை ஆணியால் அறைந்தவர்களுக்காக, தன்னை ஈட்டியால் குத்தியவர்களுக்காக தொடர்ந்து பரிந்து பேசி மன்னிப்பு வாங்கிக் கொடுத்தார் நமது மீட்பின் இயேசு. அவரின் மனநிலை நமதாகட்டும்.
– திருத்தொண்டர் வளன் அரசு