அவரிடம் அடைக்கலம் புகுந்தோரை அவர் அறிவார். நாகூம் 1:7
நாம் நமது பெற்றோரிடம் நமது விருப்பங்களை சொல்லும்பொழுது அவர்கள் நமக்கு செய்து தருவார்கள். சில சமயங்களில் அவர்களால் செய்யக் கூடாமல் போய்விடும். ஆனால் ஆண்டவரிடம் அடைக்கலம் புகுந்தோமானால் நாம் விருப்புவதற்கும், நினைப்பதற்கும் வேண்டிக்
கொள்வதற்கும் அதிகமாய் செய்வார். தாய் தன் குழந்தையை மறப்பாளோ? அவள் மறந்தாலும் நான் உன்னை மறக்கவில்லை என்று ஆண்டவர் நம்மை தாங்குவார்.
கோழி தமது குஞ்சுகளை இறக்கைக்குள் கூட்டிச் சேர்ப்பதுபோல் நமது ஆண்டவரும் அவரின் இறக்கைக்குள் நம்மை மூடி பாதுக்காத்து ஒருதீங்கும் நம்மை தொடாதபடிக்கு அரவணைத்துக்கொள்வார். இருளில் இருந்த நம்மை ஒளியில் வரவழைத்து தமது முகத்தை நம்மேல் பிரகாசிக்கச் செய்து நம்மை அவரின் கிருபையால் தாங்கிக் கொள்வார்.
சில சமயம் நமக்கு ஏற்படும் துன்பங்களால் நாம் மனம் சோர்ந்து போய்விடுகிறோம். எந்த ஒரு ஆசீர்வாதமும் பெற்றுக்கொள்ளும் முன்னே சில சோதனைகள் நமக்கு ஏற்படும். கிறிஸ்து இயேசுவும் தாம் பரலோகம் செல்லும் முன்னே சிலுவை சுமந்து அடிக்கப்பட்டு துப்பப்பட்டு, எத்தனை எத்தனை, அவமானங்கள், நிந்தைகள் ஏளனபேச்சுகளை சகித்தார். மரியா அவர்களும் கடவுளை பெற்றெடுக்கும் பாக்கியம் பெற்றாலும் அதற்கு முன் எத்தனை எத்தனை அவமானங்கள், ஏளன பேச்சுகள் பேசியதை கேற்று இருப்பார்கள். அதற்காக எவ்வளவு துன்பங்களை சகித்திருப்பார்கள்.
ஆண்டவரின் சீடர்களான திருத்தூதர்கள் எவ்வளவு பாடுகளை அடைந்தார்கள். ஆண்டவரின் நற்செய்தியை அறிவித்த பவுல் எவ்வளவாய் துன்பங்களை அடைந்தார். அவர் சவுலாய் இருக்கும்பொழுது படாத கஷ்டங்களை ஆண்டவருக்குள் வந்தபிறகு பவுலாய் மாறின பின் எத்தனை, எத்தனை, துன்பங்கள்,துயரங்கள்.மோசே பார்வோனின் அரண்மனையில் வாழ்ந்தவர். ஆண்டவரிடம் வந்தபிறகு எத்தனை எத்தனை பாடுகள், இஸ்ரயேல் ஜனங்களின் முருமுறுப்புக்கு ஆளாக வேண்டி அவர்களுக்காக ஆண்டவரிடம் பரிந்து பேசி 40 வருஷம் வழிநடத்தி வந்தார்.
இப்படியாக இறைவாக்கினர் , ராஜாக்கள் என்று சொல்லிக்கொண்டே போகலாம். கிறிஸ்துவ வாழ்க்கை பஞ்சு மெத்தை வாழ்க்கை இல்லை. முதலில் அதில் பல கஷ்டங்களும், துன்பங்களும் ஏற்படத்தான் செய்யும். ஆனாலும் அதை பொறுமையோடு சகித்தால் ஆண்டவரிடத்தில் அடைக்கலம் பெற்று அவரோடு கூட நாமும் ஆளுகை செய்வோம். துன்பங்களால் பிற்காலத்தில் நன்மையே கிடைக்கும். நம் இதயம் சீர்படும், வாழ்க்கை செழிக்கும். ஆகையால் நமக்கு ஏற்படும் எந்த துன்பங்களையும் கண்டு துவண்டு விடாமல் மன உறுதியோடு இருந்து ஆண்டவரை மகிமைப்படுத்துவோம்.
ஜெபம்.
அன்பே உருவான தெய்வமே, எத்தனை எத்தனை, தொல்லைகள், பாடுகள், கஷ்டங்கள் வந்தாலும் அதில் சோர்ந்து போகாமல் மனஉறுதியோடு அவைகளை பொறுமையோடு தாங்கிக் கொள்ள கிருபை அளித்தருளும். துன்பங்களுக்கு பின் நீர் எங்களை உயர்த்துவீர் என்பதை நாங்கள் மறவாமல் உம்மை இன்னும் உறுதியாய் பற்றிக்கொள்ள உதவி செய்யும். எங்கள் விசுவாசத்தில் சோர்ந்து போகாதபடிக்கு காத்து கொள்ளும். நீர் எதை செய்தாலும் அது எங்களின் நன்மைக்கே என்பதை உணர்ந்து நன்றியோடு உம்மை துதிக்கவும், போற்றவும் கற்றுத்தாரும். மீட்பர் இயேசு கிறிஸ்துவின் இனிய நாமத்தில் வேண்டுகிறோம் எங்கள் ஜீவனுள்ள தந்தையே!ஆமென்!!அல்லேலூயா!!!.