அவரா(லா)கிட…
சீ.ஞா. 27 : 4-7, 1கொரி.15: 54-58, லூக்.6: 39-45.
ஒருவர் தன் மகளுக்குத் திருமணம் செய்து அவரைத் தன் மருமகனிடம் ஒப்படைத்து “மாப்பிள்ளை என் மகளுக்கு கொஞ்சம் வாய் நீளம் அவளைக் கவனிச்சுக்கோங்க” என்றார். அதற்கு மருமகன் மாமனாரிடம், கவலைப்படாதீர்கள், நான் அவளை நன்றாகக்கவனித்துக் கொள்வேன் எனக்குக் கொஞ்சம் கை நீளம்” என்றாராம். ஆம், அன்பானவர்களே இன்றைய வாசகங்கள் மூன்றும் நம் வார்த்தைகள் எப்படியிருக்க வேண்டும்? நம் வார்த்தைகள் நன்றாக இருக்க நம் உள்ளம் எப்படியிருக்க வேண்டும்? என்பதைப்பற்றி நமக்கு எடுத்துரைக்கிறது. நாவடக்கம் மிகவும் முக்கியம் என்பதால்தான் வள்ளுவப் பெருந்தகை இதற்கெனத் தனி அதிகாரத்தையே உருவாக்கியுள்ளார். எடுத்துகாட்டாக, இனியவை கூறல், புறங்கூறாமை, சொல்வன்மை. இதில் முத்தாய்ப்பாக பயனில்லாத சொற்களைப் பேசுபவரை மனிதரில் பதர் என்று முத்திரைக் குத்துகிறார் நம் பாட்டன்.
“பயன்இல் சொல்பாராட்டுவானை மகன் எனல்
மக்கள் பதடி எனல்” (குறள் – 196)
ஒவ்வொரு வார்த்தைக்குள்ளும் ஒரு சக்தி மறைந்திருக்கின்றது. எனவேதான் சொல்லினை நாம் மந்திர சொல் என்போம். நாம் மனிதனாவதும், மிருகமாவதும் நமது சொல்லின் மூலம்தான். இதனைத்தான் பாரதியார், ‘மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்’ என்கிறார். நம் உள்ளத்தின் உணர்வுகளே நமது சிந்தனைகளாகவும், நமது சிந்தனைகளே சொல்லாகவும், அச்சொல்லே நமது செயல்களாகவும் மாறுகிறது. எனவே நமது எண்ணங்களுக்கும், செயல்களுக்கும் நடுவே பாலமாக அமைவது நமது சொல்லே.
மற்ற மிருகங்களிடமிருந்து வேறுபடுத்தி காட்டுவதும் இச்சொல்தான.; எலும்பில்லாத இந்த நாவு தான் மனிதனின் அங்கங்களிலேயே மிகச்சிறந்த பகுதி. அதேசமயம் மிகவும் மோசமானதும் இதுதான். சொர்க்கத்தின் சாவியும் நரகத்தின் சாவியும் இந்த நாவுதான். ஆயுதப் பூசைக்கு நாம் அனைவரும் பூசை செய்ய வேண்டியதும் இந்த நாவிற்குதான்.காரணம் இதனைவிட மிகப்பெரிய ஆயுதம் இவ்வுலகில் இல்லை. அதனால்தான் மென்மையான நாவு வன்மையான பற்களுக்குள் சிறைப்பிடிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளது. நாக்கு சுட்டெரித்துவிடும். எனவேதான் நெருப்பிற்கும் நாவு உண்டு, நாவும் நெருப்பைப் போல சிவந்திருக்கும.; (யாக். 3 : 6)
இன்றைய முதல் வாசகத்தில் சொல்லின் சிறப்பு விளக்கப்படுகிறது. சொல் என்பது, மனிதனிடம் உள்ள பண்பாட்டைக் காட்டுகிறது என்று சொல்லி, ஒருவரின் பேச்சைக் கொண்டே அவரைப்பற்றி அறிந்து கொள்ளலாம் என்ற சூத்திரமும் தருகிறது. இதையே ஆண்டவர் இயேசு நற்செய்தியில் கூறுகின்றார். “நல்லவர் தம் உள்ளமாகிய நல்ல கருவ+லத்தினின்று நல்லவற்றை எடுத்துக் கொடுப்பார். தீயவரோ தீயதினின்று தீயவற்றை எடுத்துக் கொடுப்பார்” உள்ளத்தின் நிறைவையே வாய் பேசும் என்று தெளிவுபடக் கூறுகிறார்.
இப்பொழுது நாம் இன்னும் நுட்பமாகக் கவனிக்கக் கூடியது, நாம் யாரின் கிளைகள், நாம் யாரோடு இணைந்திருக்கிறோம், நாம் யாராக மாற வேண்டும் என்பவை அனைத்தும் நம்முன் கேள்விகளாக எழுந்து நிற்கின்றன. நானே திராட்சைக் கொடி, நீங்கள்அதன் கிளைகள் என்றாரே? “ இனி வாழ்பவன் நானல்ல, கிறித்துவே என்னில் வாழ்கிறார்” (கலா.2:20) என்றாரே? பவுலடியார், “நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற்கேற்ற செயலில் காட்டுங்கள்” (மத்தேயு 3:8) என்றாரே?, நம் இயேசு. எனவே நம் எண்ணத்தையும் உணர்வுகளையும், சொல்லினையும் செயலினையும் அவரிலே வைப்போம் அவராக மாறுவோம்.
“அவரைச் சார்ந்துதான் நாம் வாழ்கின்றோம், இயங்குகின்றோம், இருக்கின்றோம்”. (தி.ப.17:28) அவரால் அவராகிட இணைவோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு