அழைப்பும் மறுஅழைப்பும்
மாற்கு 8: 22- 26
இயேசு செய்கின்ற ஒவ்வொரு புதுமையும் பல பாடங்களை நம்முன் படம் பிடித்துக் காட்டுகின்றது. குறிப்பாக அவர் செய்த ஒவ்வொரு அற்புதமும் தன்னுடன் இருந்த, அவரைப் பின்பற்றி வந்த ஒவ்வொரு சீடருக்கும் சீடத்துவ வாழ்க்கையை எடுத்து காட்டுவது போல அமைகிறது. ஒரே சொல்லால் அவன் குணம் பெறாது சில செயல்களால் சிறிது சிறிதாக குணம் பெறுகிறான். இரண்டு முறை அவன் கண்களில் ஆண்டவர் தன் கைகளை வைத்து குணம் கொடுக்க வேண்டியதாயிற்று.
இந்த மொத்த நிகழ்ச்சியையும் இயேசுவின் சீடர்களின் வாழ்க்கையோடு ஒத்து போவதாகவே காணமுடிகிறது. முதலில் தன்னிடம் வந்தவரை ஊருக்கு வெளியே அழைத்துச் செல்கிறார். சீடர்களும் இயேசுவால் அழைக்கப்பட்ட உடன் அனைத்தையும் விட்டுவிட்டு (இவ்வுலகவாழ்வினை) அவரோடு சென்றனர். (மாற்கு 1 : 20) முதலில் அழைக்கப்பட்டவர்கள் அனைவருமே ஆண்டவரை அவரது இறப்பிற்கு முன்பு தனியே விட்டுவிட்டு ஓடிவிட்டனர். ஆண்டவரோடு இருந்து, உண்டு, உடுத்து, உறங்கியவர்களின் அகக்கண்கள் முழுமையாகத் திறக்கப்படவில்லை. மெசியா என்றார்கள், ஆனால் அவர்கள் அரசியல், சமுதாய மெசியாவை எதிர்ப்பார்த்தனர். இன்றைய நற்செய்தியில் கூட இதே போலத்தான் கண்தெரியாதவர் மனிதனைப் பார்த்தார். ஆனால் மரங்கள் போல இருக்கின்றார்கள் என்றார். தன் பார்வை மரங்களாய் இருக்கின்றதெனக் கூறினார். சீடர்களின் மெசியாவைக் கண்ட கிறித்தவப் பார்வையும் அப்படி தானே இருந்தது. ஆனால் இரண்டாம் நேரம் இயேசு தொடும்பொழுது அவர் முழுமையாகப் பார்வைப் பெறுகிறார். சீடர்களும் இரண்டாம் முறையாக இயேசுவின் உயிர்ப்புக்கு அழைக்கப்படுகிறார்கள். (யோவான் 21) இந்த இரண்டாம் அழைப்பின் பொழுது தான் அவர்கள் முழுமையாக மெசியாவைக் கண்டடைகிறார்கள்.
ஆக, இறை நம்பிக்கை என்பது உடனடியாக, ஒரே நாளில் உச்சமடைவதல்ல. இது கொஞ்சம் கொஞ்சமாக நம்மையே ஒருமுகப்படுத்தி தயாரிப்பது. அவரைப் பின்பற்றும் பொழுது பல புனிதர்களைப் போல நாமும் “ஆன்மாவின் இருளினை” சந்திக்கலாம். மீண்டும் மீண்டும் தவறலாம். ஆனால் இயேசுவை நம்பிக்கையோடு பற்றிப் பிடிக்கும்போது நம்முன் அவர் ஒளியாக ஒளிர்ந்து நம் பலவீனங்களை பலமாக மாற்றுவார். நம் தடைகள் ஒவ்வொன்றுக்கும் விடைகள் கிடைக்கும். நம் குறைகளை நிறைவாக்குவார். நாமும் நம் கிறித்துவ அழைப்பில் உண்மையான மெசியாவைக் காண முயல்வோம்.
– திருத்தொண்டர் வளன் அரசு