அல்லேலூயா
திருப்பாடல் 149: 1 – 2, 3 – 4, 5 – 6, 9
திருப்பாடல் 149 வெற்றியின் திருப்பாடல் என்று சொல்லலாம். இஸ்ரயேல் மக்கள் தங்களது எதிரிகளை வென்று, மகிழ்ச்சியில் திளைத்திருக்கிறபோது எழுதப்பட்ட பாடலாக இது பார்க்கப்படுகின்றது. இந்த திருப்பாடலின் சிறப்பு, அல்லேலூயா என்கிற வார்த்தையில் தொடங்கி, அல்லேலூயா என்கிற வார்த்தையிலே முடிவடைகிறது. இன்றைக்கு கத்தோலிக்க கிறிஸ்தவ மக்களிடையே ”அல்லேலூயா” என்கிற வார்த்தை, ஏதோ பிரிந்து போன சகோதரர்கள் மட்டுமே பயன்படுத்துகிற வார்த்தை என்பது போன்ற, ஓர் எண்ணம் உள்ளத்தில் இருக்கிறது. அல்லேலூயா என்றால் என்ன? இது ஒரு குறிப்பிட்ட சபையினருக்கு மட்டும் தான் சொந்தமானதா? இந்த வார்த்தையை கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பயன்படுத்தினால் அது சரியாக இருக்குமா? என்றெல்லாம் கேள்விகள் நமக்குள்ளாக எழுந்து மறைகிறது.
அல்லேலூயா என்பது ஓர் எபிரேய வார்த்தை. “யா“ என்கிற வார்த்தை ”யாவே” இறைவனைக்குறிக்கக்கூடிய சொல். “இறைவன் போற்றப்படுவாராக” என்பது தான் இதனுடைய பொருள். திருப்பாடல் ஆசிரியர் கடவுளைப் போற்றுவதற்காக எழுதிய வார்த்தை தான் இது. ஆனால், இது கத்தோலிக்கக் கிறிஸ்தவர்கள் மத்தியில், பழக்கப்படாத வார்த்தையாகவே, காலம் காலமாக இருந்து வருகிறது. இந்த வார்த்தையை, அன்னையாம் திருச்சபை வழிபாட்டில் கூட, அதிகமாகப் பயன்படுத்துவதை, நாம் பயன்படுத்தியும் தெரியாத உண்மையாக இருக்கிறது. நற்செய்தி வாசகத்திற்கு முன்னால், நாம் இதனைப் பயன்படுத்துகிறோம். பாஸ்கா காலத்தில், திருப்பலியின் நிறைவில் நாம் பயன்படுத்துகிறோம். பாஸ்கா கால, மூவேளைச் செபத்தில் இதனைப் பயன்படுத்துகிறோம்.
இந்த வார்த்தை நமது வாழ்வின் செபமாக மாற வேண்டும். இதனை பயன்படுத்துகிறவர்கள் குறிப்பிட்ட சபையினர் என்றில்லாமல், இது கடவுளைப் புகழக்கூடிய வார்த்தை என்பதை, நாம் அனைவரும் உணர்ந்து, இந்த வார்த்தையை அடிக்கடிப் பயன்படுத்தி, கடவுளைப் போற்றிப்புகழ்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்