அற்ப அற்புதங்களா?
(யோவான் 6 : 22-29)
உணவினை உண்ட மக்கள் மறுநாளும் இயேசுவுக்காகக் காத்திருக்கின்றனர். அதுமட்டுமன்றி, இயேசுவைத் தேடி படகுகளில் ஏறி கப்பர்நகூமுக்கு வருகின்றனர். ஆனால் இயேசு இதனை விரும்பவில்லை, கண்டிக்கின்றார். காரணம் மக்கள் இயேசுவைத் தேடியது அவருக்காக அன்று, தங்களது வயிறுகளை நிரப்பும் அப்பத்திற்காகவே. உண்மையான வாஞ்சை என்பது அவர்மேல் இருந்ததைக் காட்டிலும், அவர் செய்த புதுமைகள் மேலும் அற்புதங்கள் மேலும் தான் இருந்தன. இந்தத் தேடலை இயேசுவே மிக அற்பமாக நினைக்கின்றார். காரணம் அவர்கள் நிலையற்ற ஒன்றிற்காக நிலையான ஆண்டவர் இயேசுவை விட்டுவிட்டனர்.
இன்றும் இது தொடர்கின்றதா என்றால் நம்மால் உறுதியாகக் கூற முடியும் ‘ஆம்’ என்று. காரணம் இன்றும் நம்மில் பலர் ஆண்டவரைத் தேடுவது அப்பம் என்ற அற்புதத்திற்காகவே. அவரைவிட அற்புதங்களும் புதுமைகளுமே இன்று நம்மில் பலருக்கு முக்கியமான தேவையாகத் தெரிகின்றது. இன்று, பலபேர் பிற சபைகளுக்கு, எந்தவொரு அடிப்படைத் தகுதியுமில்லாத போதகர்களிடம் செல்வது இப்படிப்பட்ட அற்ப அற்புதங்களுக்காகவே. ஆண்டவரைத் தேடுவதைக் காட்டிலும் அற்புதங்களுக்காக தினம் ஒரு சபையைத் தேடி நாம் அலைகிறோமா? என சிந்திப்போம்.
இயேசு இந்தக் கேள்வியைக் கேட்பது நற்கருணை இறையியலின் மையமான வினா. சாதாரண அப்பத்தில் இயேசுவினைப் பார்ப்பதைக் காட்டிலும் மிகப்பெரிய அற்புதமோ அதிசயமோ நம்முடைய வாழ்வில் நடைபெறப் போவதில்லை. அப்படி நடந்தாலும் அது நமக்குத் தேவையில்லை என்ற வைராக்கியத்தோடு ஆண்டவரை மட்டும் தேடுபவர்களாக நிலையான, அவர் ஏற்படுத்திய திரு அவையில் அவரோடு இருப்போம்.
– திருத்தொண்டர் வளன் அரசு