அறிதலின் வழி அழியா வாழ்வு
மாற்கு 6: 53 – 56
பிறரை அறிந்து கொள்வதும், பிறரால் அறிந்து கொள்ளப்படுவதும் அறிதலின் இரண்டு நிலைகள் என்று உளவியல் சிந்தனையாளர் சிக்மண்ட் ப்ராய்டு கூறுவார். இவையிரண்டில் மிகவும் மகிழ்ச்சியான வாழ்வுக்கு எது முக்கியம் என்று கேட்டோமென்றால், அனைவரும் பிறர் என்னை அறிந்து செயல்பட வேண்டும் என்று தான் கூறுவார்கள். ஏனென்றால் நிறைகுறைகளை ஏற்றுக்கொண்டு வாழ்வார்கள். ஆனால் நாம் அறிந்து கொண்டு வாழ்வது கடினம். அதனால் தான் ஆபிரகாம் லிங்கன் வக்கீலாகத் தன் தொழிலை ஆரம்பித்த போது “உறவு வாழ்வைப் பொறுத்த அளவில் நான் தோல்வியைத் தான் தழுவப் போகிறேன். ஏனென்றால் யாரும் என்னை விரும்ப போவது கிடையாது” என்று அவ்வப்போது சொல்லிக் கொள்வாராம். ஆனால் அதே ஆபிரகாம் லிங்கன் பிற்காலத்தில் மற்றவர்களை அறிந்து செயல்படக்கூடிய கலையில் நிபுணத்துவம் (Master in the art of knowing) என்று சொல்லக்கூடிய அளவிற்கு உயர்ந்து நின்றார்.
இன்றைய நற்செய்தி வாசகத்தில் மக்கள் இயேசுவை அறிந்து செயல்படுகின்றார்கள். கெனசரேத் பகுதியில் அதிக நோய்வாய்ப்பட்டவர்கள் இருந்தார்கள். ஏனென்றால் நம்பிக்கையை அலசி ஆராய்ந்து பார்க்கக்கூடிய இடமாக இருந்தது. இங்கு தான் சீடர்கள் பயணம் செய்யும்போது, இயேசு கடலையும் காற்றையும் அடக்குகின்றார். அந்த அடிப்படையில் இயேசுவின் புதுமைகளில் குணப்படுத்தக்கூடிய புதுமை இங்கு அதிகமாக வெளிப்படுகிறது. எவ்வாறெனில் மக்கள் இயேசுவை முழுமையாக அறிந்து இருந்தார்கள். இந்த அறிதல் தான் அவர் வந்திருக்கிறார் என்று அறிந்ததும், அவரிடம் செல்வதற்கு ஆர்வத்தை கொடுக்கிறது. அந்த ஆர்வம் தான் அவர்கள் அழியா வாழ்வு பெற துணைபுரிகிறது.
நாம் இயேசுவை அறிந்து செயல்படுகிறோமா? நாம் எப்படி அறிந்திருக்கின்றோம்? நண்பராக, மருத்துவராக, சாதாரண மனிதனாக? சிந்திப்போம்.
– அருட்பணி. பிரதாப்