அர்ப்பண வாழ்வு
திருத்தூதர் பணி 17: 15, 22 – 18: 1
திருத்தூதர் பவுல் முதன்முறையாக ஏதேன்ஸ் நகருக்குள் நுழைகிறார். கிறிஸ்தவ மறைப்பரப்பு பணியாளர்களிலேயே இவர் தான், முதலாவதாக இந்த நகரத்திற்குள் நுழைகிறார் என்று கூட சொல்லலாம். இந்த முதல் பயணம் அவருக்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது என்று நாம் சொல்லிவிட முடியாது. ஆனால், ஒரு சிலர் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டதை நாம்பார்க்கிறோம். ”சிலர் நம்பிக்கை கொண்டு அவர்களுடன் சேர்ந்து கொண்டனர்” (17: 34). ஏதேன்ஸ் மிகப் பிரபலமான நகரம் என்பது நாம் அறிந்ததே. பலத்திற்கும், அறிவாற்றலுக்கும் பெயர் போனது. மிகப்பெரிய அறிவாளிகளும், அரசர்களும் இங்கிருந்து வந்திருக்க வேண்டும். அல்லது ஏதேன்ஸ் தொடர்புடையவர்களாக இருந்திருக்க வேண்டும். கிறிஸ்து பிறப்பிற்கு பல ஆண்டுகளுக்கு முன்னர், எகிப்திய காலனியாக இருந்து வந்தது. “மினர்வா“ என்கிற கிரேக்க கடவுளின் பெயரால், இது ஏதேன்ஸ் என்கிற பெயர் பெற்றது.
பவுல் இயேசுவைப் பற்றிய நற்செய்தியை அவர்களுக்கு, அவர்களுடைய பிண்ணனியிலே அறிவிக்கிறார். அவருடைய நற்செய்தி ஒரு சிலரால் கிண்டல் செய்யப்படுகிறது. ஒரு சிலரால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது. ஒரு சிலர் மீண்டும் அவருடைய பேச்சைக் கேட்ட பிறகு முடிவெடுக்கலாம் என்பது போல, பதில் தருகிறார்கள். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள் பவுலோடு சேர்ந்து கொள்கிறார். அதன்பிறகு பவுல் அடுத்த நகரத்துக்கு செல்கிறார். கிறிஸ்துவால் தான் நற்செய்தி அறிவிக்கப்படுவதற்கு அழைக்கப்பட்டிருக்கிறேன். அதில் நான் முழுமையாக ஈடுபட வேண்டும் என்பதுதான், பவுலின் ஆன்மீகமாக இருந்தது என்பதற்கு, இந்த பகுதி அருமையான எடுத்துக்காட்டு. தன்னுடைய கடமையை அவர் நிறைவாகச் செய்கிறார். எங்கெல்லாம் கிறிஸ்துவை அறிவிக்க முடியுமோ அங்கெல்லாம் அறிவிக்கிறார். அதற்கான பலனை அவர் எதிர்பார்க்கவோ, அதில் புகழ் பெற வேண்டும் என்பதோ, அதனால் மனமுடைந்து போக வேண்டும் என்பதோ அவருடைய எண்ணமல்ல. தன்னுடைய கடமையை அவர் அர்ப்பண உள்ளத்தோடு செய்கிறார்.
நம்முடைய வாழ்வில் நாமும் எதையும் நிறைவோடு செய்வதற்கு அழைக்கப்படுகிறோம். கடவுள் நமக்கான வாழ்வைத் தந்திருக்கிறார். இந்த வாழ்வை நாம் மற்றவர்களுக்காக வாழ வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். நம்முடைய கடமையை அர்ப்பண உள்ளத்தோடு செய்வதுதான், நாம் கடவுளுக்கு கொடுக்கிற காணிக்கையாக இருக்க முடியும். அத்தகைய வாழ்வு வாழ, நாம் உறுதிகொள்வோம்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்