அருள் நிறைந்த மரியே, வாழ்க!
பங்குமக்கள் அடிக்கடி இந்தப்பகுதியைப் படிக்கின்றபோதெல்லாம், ஒரு கேள்வியை அடிக்கடி கேட்பதுண்டு. கன்னிமரியாளுக்கு வானதூதர் மங்களவார்த்தை சொல்கிறபோது கேட்கும் அதே கேள்வியைத்தான், செக்கரியாவும் கேட்கிறார். கன்னிமரியாளுக்குப்பதில் சொல்லப்படுகிறது. செக்கரியாவுக்கு தண்டனை கொடுக்கப்படுகிறதே? இருவரும் ஒரே கேள்வியைத்தானே கேட்கிறார்கள்? என்று. ஏனெனில் கன்னிமரியாள், ‘இது எப்படி நிகழும்? நான் கன்னி ஆயிற்றே?’ என்று கேட்கிறாள். செக்கரியாவும் வானதூதரிடம், ‘இது நடைபெறும் என எனக்கு எப்படித்தெரியும்? நான் வயதானவன். அதுபோல் என் மனைவியும் வயது முதிர்ந்தவராயிற்றே?’ என்றார். இதற்கு பல பதில்களை நாம் சொன்னாலும், ஒரே ஒரு பதில் நம் கேள்விக்கு நிறைவானப்பதிலைத்தரும். கணவனை அறியாத கன்னி கருவுறுதல் என்பது நடைபெறவே முடியாத ஒன்று. ஆனால், வயதானவர்கள் பிள்ளை பெறுவது மீட்பின் வரலாற்றில் நடந்திருக்கிறது. ஆபிரகாம் வயதுமுதிர்ந்த வயதில் பிள்ளை பெற்றார். குருத்துவப்பணி ஆற்றக்கூடிய செக்கரியாவுக்கு இது நன்றாகத்தெரிந்திருக்க வேண்டும். அப்படித்தெரிந்திருந்தும் கேட்பதால்தான், வானதூதரால் அவருக்கு ஓர் அடையாளம் தரப்படுகிறது. அது தண்டனை அல்ல. அடையாளம்.
இன்றைக்கு பிரிவினைச்சபைகள் கன்னிமரியாளுக்கு சிறப்பு வணக்கம் செலுத்துவதை குறைகூறிக்கொண்டிருக்கின்றன. ஆனால், இன்றைய நற்செய்திப்பகுதியில் தந்தையாகிய கடவுளே அன்னைக்கு புகழ்மாலை சாற்றுவதை நாம் ஆதாரத்தோடு நிரூபிக்கலாம். கபிரியேல் அதிதூதர் இறைவனின் திருமுன் பணிபுரியும் ஏழு வானதூதர்களில் ஒருவர். அவருடைய பணி தூதுரைக்கும் பணி. ஒரு தூதுவனின் பணி என்ன? பண்டையக்காலங்களில் அரசர் சொல்கிற செய்திகளை, எந்த நாட்டு அரசரிடம் சொல்கிறாரோ, அந்த அரசரிடம் எதைச்சொல்லச்சொன்னாரோ, அந்தச்செய்தியை ஒரு வார்த்தை கூட்டவோ, குறைக்கவோ மாட்டாமல், அப்படியேச்சொல்வது தான் தூதுவரின் பணி. இங்கே தூதுவராக அன்னைமரியாளைப்பார்த்து, கபிரியேல் வானதூதர் சொல்கிற, ‘அருள்மிகப்பெற்றவரே வாழ்க! ஆண்டவர் உம்மோடு இருக்கிறார்’ என்கிற வார்த்தைகள் கபிரியேலின் வார்;த்தைகள் அல்ல, மாறாக, தந்தையாகிய கடவுளின் வார்த்தைகள். தந்தையாகிய கடவுளே, அன்னை மரியாளை வாழ்த்திப் போற்றுகிறார் என்றால், நாமெல்லாம் எம்மாத்திரம்? கடவுள் மரியாளை ஏதோ வாழ்த்த வேண்டுமென்பதற்காக வாழ்த்தவில்லை. அந்த வாழ்த்துக்கு மரியாள் முற்றிலும் தகுதியானவள் என்பதால் வாழ்த்தினார்.
இறைவனால் நமக்கு கொடுக்கப்பட்ட உயர்ந்த கொடை அன்னைமரியாள். நமக்காக எந்நாளும் தந்தையாகிய இறைவனிடம் பரிந்துபேசிக்கொண்டேயிருக்கிறாள். அன்னையின் உதவியை மன்றாடியவர்கள் யாரும் கைவிடப்பட மாட்டார்கள். அந்த அன்னையிடம் நம் முழுமையான நம்பிக்கை வைப்போம். அவளிடத்தில் நம்மை ஒப்புக்கொடுப்போம்.
– அருட்பணி. தாமஸ் ரோஜர்