அருங்குறிகள் வெளிப்படுத்தும் செய்தி
காலத்தின் அருங்குறிகளைப்பார்த்து தங்களின் வாழ்க்கையை மாற்றிக்கொள்ளாதவர்கள் வரப்போகின்ற அழிவிலிருந்து தங்களைக்காப்பாற்றிக் கொள்வது இயலாத காரியம் என்று இயேசு கிறிஸ்து எச்சரிக்கை விடுக்கிறார். கிறிஸ்து பிறப்பின் தயாரிப்பு காலத்திற்கு முன்னதாக, உலக முடிவையும், இறுதி நாட்களின்போது நிகழும் காரியங்களையும் நாம் நற்செய்தியாக வாசிக்கிறோம். காரணம் நாம் ஒவ்வொரு மணித்துளியும் எச்சரிக்கை உணர்வோடு இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். அந்தக்கருத்தின் அடிப்படையில் இன்றைய நற்செய்தியை வாசித்தால், இயேசு நமக்குச்சொல்ல வருகிற செய்தியை அறிந்துகொள்ளலாம்.
வரப்போகிற நிகழ்வு கண்டிப்பாக நிகழும். அது திடீரென்று நிகழும். வரப்போகிற நிகழ்விற்கு இப்போதே நாம் தயாராக இல்லையென்றால், அதை நம்மால் எதிர்கொள்ள முடியாது. வரும்போது பார்த்துக்கொள்ளலாம் என்றால், அது நிச்சயமாக முடியாது. ஆனால், அதற்கான அருங்குறிகள் நமக்கு வெளிப்படுத்தப்படும். அந்த அருங்குறிகள் வரும்போதே நாம் நம்மை நன்றாகத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். நோவாவின் வாழ்வு சிறந்த எடுத்துக்காட்டு. நோவாவிற்கு அழிவு வரப்போவதை நடந்த அருங்குறிகளால் கண்டுகொள்கிறார். அவருடைய உள்ளம் வரப்போகிற நிகழ்விலிருந்து, அழிவிலிருந்து காத்துக்கொள்ள முயற்சி எடுக்கிறது. ஆனால், மற்ற மக்கள் உண்பதிலும், குடிப்பதிலும், உறங்குவதிலும் தங்கள் நேரத்தை செலவிடுகின்றனர். அவர்கள் காலம் காட்டும் அருங்குறிகளை கவனிக்க மறந்துவிடுகின்றனர். அதனால் தான் மீட்கப்பட முடியாத அழிவை சந்திக்கின்றனர். நோவா மீட்கப்படுகிறார்.
நாம் எப்படி வாழ்கிறோம்? எனது வாழ்வு கடவுளுக்கு ஏற்புடைய வாழ்வாக இருக்கிறதா? எனது வாழ்வில் நாம் எதையாவது மாற்ற வேண்டுமா? இதற்கெல்லாம் நமக்கு விடைகிடைக்க வேண்டுமென்றால், அதைப்பற்றிய விழிப்போடு இருக்க வேண்டும். விழிப்போடு இருக்கிறபோது, அதைப்பற்றிய அருங்குறிகள் நிச்சயம் நமக்கு வெளிப்படும். அதற்கேற்ப நமது வாழ்வை மாற்றி அமைத்துக்கொண்டு, மீட்பைப் பெற்றுக்கொள்வோம்.
~அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்