அமைதி காப்போம்
இயேசுவின் உருமாற்ற நிகழ்வின் போது, இயேசுவுக்கு நெருங்கிய சீடர்கள் மூன்றுபேர் அவரோடு இருக்கிறார்கள். மோசே, எலியாவோடு, இயேசு நெருங்கியிருப்பதையும், மாட்சிமையோடு நிறைந்திருப்பதையும் பார்த்து, அவர்கள் அதிர்ச்சி கொள்கிறார்கள். அவர்களுக்குள் நிச்சயம் பல கேள்விகள் எழும்பியிருக்கும். இயேசு உண்மையில் யார்? தாங்கள் பார்ப்பது உண்மைதானா? அல்லது கனவா? ஏதோ காட்சி கண்டது போல இருக்கிறதே? இயேசுவோடு தோன்றிய மற்ற இரண்டு மனிதர்கள் யார்? இவைகள் தான், அவர்களது உள்ளத்திற்குள்ளாக எழுந்திருக்கலாம் என்று நாம் ஊகம் செய்யக்கூடிய கேள்விகள்.
நிகழ்வின் கடைசியில் சொல்லப்படுகிற “அமைதி காத்தார்கள்“ என்கிற வார்த்தைகள் நமது சிந்தனையைத் தூண்டுவதாக இருக்கிறது. எதற்காக அமைதி காத்தார்கள்? ஏன் மற்ற சீடர்களிடம் அவர்கள் சொல்லவில்லை? இந்த அமைதி எது வரை இருந்தது? சீடர்கள் நிச்சயம் பயத்தில் உறைந்திருப்பார்கள். இயேசுவை வெறும் போதகராக, மக்கள் விரும்பும் நல்ல மனிதராகப் பார்த்தவர்களுக்கு குழப்பம் தான் அதிகரித்திருக்குமே ஒழிய, தெளிவு கிடைத்திருக்காது. ஆனாலும், சீடர்கள் அமைதி காக்கிறார்கள். அவர்களின் உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கெல்லாம் விடை கிடைக்கிறது. எப்போது? இயேசுவின் உயிர்ப்பில். குழப்பங்களும், பிரச்சனைகளும் நிரம்பியிருக்கிறபோது, நாம் அமைதி காக்க வேண்டும். நிச்சயம் நமக்கு தீர்வு கிடைக்கும்.
வாழ்வில் நமக்கு பிரச்சனைகளும், துன்பங்களும் வருகிறபோது, நாம் எப்படிப்பட்ட பார்வையோடு வாழ்வை அணுக வேண்டும் என்பதனை, சீடர்களின் அமைதி நமக்குக் கற்றுத்தருகிறது. அவர்கள் பொறுமை காக்கிறார்கள். அமைதியாக, தங்களுடைய உள்ளங்களில் எழுந்த கேள்விகளுக்கு பதில் தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் அமைதிக்கு பதில் கிடைக்கிறது. நாமும் பொறுமையாக, அமைதியாக தியானிக்கிறபோது, நிச்சயம் நமக்கு பதில் கிடைக்கும்.
அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்