அமைதியே அனைத்தையும் சாதிக்கும்
லூக்கா 1:39-45
இறையேசுவில் இனியவா்களே! திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு வழிபாட்டை ஆர்வத்தோடும் ஆசையோடும் கொண்டாட வந்திருக்கின்ற உங்கள் அனைவரையும் அன்போடு வரவேற்கின்றேன். இந்த நாள் உங்களுக்கு இனிய நாளாக இருக்கவும், நீங்கள் உடல்நலத்துடன் வாழவும், உங்கள் வாழ்க்கை ஆசீர்வாதமாக அமையவும் ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு அமைதியின் ஞாயிறாக கொண்டாடப்படுகிறது. மெசியாவின் பிறப்பிற்கு நம்மையே தயாரிக்கும் நம் மனதில் அமைதி மலர வேண்டும், அமைதிதான் அனைத்தையும் சாதிக்கும், அமைதியின் ஆட்சி அகிலத்தில் நடக்க உழைக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கங்களோடு திருவருகைக்காலம் நான்காம் ஞாயிறு வந்திருக்கிறது.
மனசு அமைதியாயில்லன்னா… ரொம்ப கஷ்டம். மனதை அமைதியாக வைத்திருப்பது என்பது கடினமான காரியம்தான். ஆனால் ஒருவர் தனது மனதை அமைதியாக வைத்திருப்பது மிக மிக அவசியமாகும். மனஅமைதி இல்லையென்றால் நாம் அனுபவிக்கும் பாதிப்புகளின் பட்டியல் நீளமாகும்.
- மனம் அமைதியாக இல்லாவிட்டால் எந்த வேலையிலும் ஈடுபட முடியாது. எந்த வேலையையும் முழுமையாகச் செய்ய முடியாது.
- திடீர் திடீர் என்று கோபம் வரும் – மிக நெருங்கியவர்கள் மீது அந்தக் கோபத்தைவிட வேண்டிவரும். அதனால் அருகில் நெருக்கமாக உள்ளவர்கள் எல்லாம் பகைவர்களாக மாறுவார்கள்.
- மன அமைதி இல்லாதபோது அறிவு தடுமாறும். எந்த முடிவையும் சரியாக எடுக்க முடியாது. முடிவு எடுத்தாலும் தவறானதாகவே முடிந்து விடும்.
- மன அமைதி இன்மையால் உறக்கம் வராது. பலர் தூக்க மாத்திரை போட்டுக் கொண்டு உறங்குவதற்கு மன அமைதி இன்மையே காரணமாகும்.
- மன அமைதி இன்மை உறக்கத்தைக் கெடுப்பதோடு உடல் நலனையும கெடுக்கும். குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய எந்த நோயும் உடம்பில் இருக்காது, ஆனால் உடல் நலமாக இருக்காது.
- மன அமைதி இன்மை புகை, மது, மாது என்ற தவறான வழிகட்கு எல்லாம் இட்டுச் செல்லும் – பல குடும்பங்கள் அழிந்தது – அழிவது எல்லாம் – ஆழமாக ஆராய்ந்து பார்த்தால் மன அமைதி இன்மையே அடிப்படைக் காரணமாகும்.
- மன அமைதி இல்லாதவர்கள் மனம் விட்டு சிரிக்கவும் முடியாது. எப்போதும் முகம் இருளடைந்தே இருக்கும்.
அதனால் மன அமைதியின் இன்றியமையாமையைப் புறக்கணிக்காமல் எச்சரிக்கையாக இருந்து அமைதியைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டு வகையில் மன அமைதி கெடுகின்றது.
• ஒன்று நமது எண்ணங்களால், பேச்சால், செயல்பாடுகளால், பேராசையால் மன அமைதியை இல்லாமல் போகிறது
நீதிபதி: சாமி தலையில் இருந்த தங்க கிரீடத்தை திருடீனியா?
திருடன்: ஆமா சார், சாமிக்கு மொட்டை போடுறதா வேண்டிக்கிட்டேன்
நான் செய்யும் செயலைப் பொறுத்துதான் என் மனம் அமைதியில் இளைப்பாறுகிறது. நான் செய்யும் செயல் தவறு என்றால் அது கவலைக்குள்ளாகிறது. உடைகிறது. உருக்குலைகிறது.
• இரண்டு மற்றவர்களால், மன அமைதி இல்லாமல் போகிறது. மற்றவர்களின் செயல்பாடுகள் நம் மனஅமைதியை சீர்குலைக்கின்றன. பறிக்கின்றன.
கணவன் : நம்ம பையன் எல்லா பாடத்திலும் முதல் மார்க்னு சொன்னான்,,, நீ ஏண்டி முழிக்கிறே ?
மனைவி : அவன் சொன்னது எல்லா பாடத்திலும் ஒவ்வொரு மார்க் வாங்கியிருக்கிறதை.
நம் அருகில் இருப்பவர்கள் நம் எண்ணத்தின்படி, எதிர்பார்ப்பின் படி செயல்படாத போதும் நம் மனஅமைதி அப்படியே நம்மைவிட்டு மறைந்துபோகின்றது. நமக்கு சொந்தம் இல்லாமல் ஆகிறது.
அமைதியைக் கொண்டிருப்பவர் மிகப்பெரிய கோடீஸ்வரர். ஆரோக்கியமான நல்வாழ்வற்கு அமைதி வழிவகுக்கிறது. அமைதி அனைத்தையும் சாதிக்கும். அவற்றின் சாதனைகள் பல. அவற்றுள் இரண்டு சாதனைகளை நாம் பார்ப்போம்.
1. அமைதியை எதுவும் அசைப்பதில்லை
ஒருமுறை கௌதம புத்தர் சாலை வழியாக சென்று கொண்டிருந்தார். பத்துப் பதினைந்து பேர் அவரை சூழ்ந்து கொண்டு கடுமையாக ஏசத் தொடங்கினார்கள். காது கொடுத்து கேட்க முடியாத அளவு கடுமையான வசவுச் சொற்கள். அனைத்தையும் புத்தர் கவனமாகக் காது கொடுத்துக் கேட்டார். அவர்கள் சொன்ன எதையும் அவர் புறக்கணிக்கவில்லை. முழு விழிப்புணர்வோடு எல்லாவற்றையும் கேட்டுவிட்டுப் பிறகு சொன்னார். “இன்று மாலை இதே வழியாகத்தான் வருவேன். நீங்கள் ஏதாவது சொல்ல வேண்டியிருந்தால் சொல்லலாம்”. இந்தத் தன்மையில் இருக்கிற மனிதரை உங்களால் என்ன செய்ய முடியும்?
அச்சத்தின் காரணமாக புத்தர் அப்படி நடந்து கொள்ளவில்லை. அவர் குரல் கொடுத்தால் ஓடோடி வர ஆயிரம் பேர் ஆயத்தமாக இருக்கிறார்கள். ஆனால், தன் வாழ்க்கைமுறை இப்படித்தான் என்று அவர் தீர்மானித்துவிட்டார். அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வதென்பது அவர் எடுத்த முடிவு. நீங்கள் அவரை என்ன செய்தாலும் சரி, அமைதியையும் ஆனந்தத்தையும் விட்டுவிட்டு உங்கள் வழிக்கு அவர் திரும்ப மாட்டார்.
அறிவார்ந்த மனிதர் இப்படித்தானே இருக்க வேண்டும். ஆனால் நாம் அப்படி இல்லை. யாராவது நம்மை ஒருபக்கம் பிடித்துத் தள்ளினால் தள்ளின பக்கம் போகிறோம். இன்னொருவர் நம்மை மற்றொரு பக்கம் இழுத்தால், இழுத்த இழுப்பிற்குச் செல்கிறோம்.
அமைதியாகவும் ஆனந்தமாகவும் வாழ்வது என்று நாம் தீர்மானித்ததாகத் தெரியவில்லை. அப்படித் தீர்மானித்திருந்தால் யாரோ, ஒரு அறிவற்றவர் எதையாவது செய்தால், நாம் பொருட்படுத்த மாட்டோமே!. அமைதியாக இருப்போமே!. ஆனால் அப்படியா இருக்கிறோமா? யாராவது ஒரு அறிவற்றவர் எதையாவது செய்தால் அங்கேயே, அந்த இடத்திலேயே எதையாவது செய்து, அவரைவிடப் பெரிய அறிவற்றவர் நாம் என்று நிரூபிக்கிறோம். நம் வாழ்க்கையை நிறைவான முறையில் நடத்துவதென்பது நம் கையில்தான் இருக்கிறது. ஆகவே யாராலும் அமைதியை இழக்காதவாறு நடந்துக்கொள்ளுங்கள். அசையாதிருங்கள். அமைதியோடு இருங்கள். அமைதி அனைத்தையும் சாதிக்கும். சாதியுங்கள்.
2. அமைதி பிரச்சினைகளைப் போக்கும்
ஒரு மனைவி தன்னுடைய கணவரோடு மனநல மருத்துவரை பார்க்கச் சென்றார். ”என்னம்மா பிரச்சினை?” மருத்துவர் கேட்டார். ”சார், எங்க இரண்டு பேருக்கும் தினமும் ஒரே சண்டைதான், வாழ்க்கையில நிம்மிதியே இல்ல, ரொம்ப கஷ்டமாக இருக்கு.. நீங்க தான் ஏதாவது நல்ல மருத்துவத்தை என் கணவருக்கு செய்யனும்” என்றார். மனநல மருத்துவர், எம்மா, உங்க வீட்ல அதிகமா பேசுறது யார்? நீங்களா? அவரா” என்றுக் கேட்டார். அந்த அம்மா உடனே, சார் நான் தான் சார் அதிகமா பேசுவேன்.” என்றார்.
”இந்த பிரச்சினையை எளிதாக தீர்த்துவிடலாம், இனி உங்க கணவர் உங்க வீட்டுக்குள்ள வந்ததும் உங்க வாயில தண்ணீ ஊத்தி ஒரு அரைமணிநேரம் அப்படி வாயை அசைக்கமா இருக்கணும், இத தொடர்ந்து ஒரு வாரம் செய்யனும். ஒரு வாரம் கழிச்சி என்ன வந்து பாருங்க.”. என்றார்.
”ஒருவாரம் கழிச்சி அந்த அம்மா ரொம்ப சந்தோசமா வந்து டாக்டர பார்த்து ரொம்ப நன்றி டாக்டர். இப்ப எங்களுக்குள்ள சண்டையே இல்ல, நாங்க ரொம் சமாதானமா, சந்தோசமா அமைதியா இருக்கோம்” என்றார். பல வருஷமாக இருந்த சண்டையை எப்படி டாக்டர் உங்களால ஒரு வாரத்தில தீர்க்க முடிஞ்சது..என்று மனநல மருத்துவரிடம் அந்த அம்மா கேட்டார். அதற்கு அவர் சொன்னார், ”அம்மா, உங்களுக்கு பிரச்சினை வாயில..நீங்க ரொம்ப பேசி பேசியே உங்களுக்குள்ள சண்டை வந்திருக்கு.. அதான் வாயில தண்ணீய வைக்க சொன்னேன. இப்ப நீங்க பேசல பிரச்சினையே இல்ல” என்றார்.
அன்புமிக்கவர்களே! நாம் அமைதியாக இல்லாமல் பேசி பேசியே பல பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கின்றோம். நாம் அமைதியாக இருந்து பழக வேண்டும். பிரச்சினைகளை அமைதியில் அணுக வேண்டும். பிரச்சினைகள் வரும்போது பேசாமல் அமைதியாக இருந்து பாருங்கள். பிரச்சினைகளுக்கான முடிவுகள் உடனே கிடைக்கும். பேச ஆரம்பித்தால் பிரச்சனைகள் வளர ஆரம்பிக்கும்.
தியானம் செய்து அமைதி நிலைக்கு வர வேண்டும். தினமும் தனியே இருந்து வாழ்க்கையை அமைதியில் பரிசோதித்து பார்க்க வேண்டும். அப்படிப்பட்ட அமைதி நம் வாழ்வின் உண்மை நிலவரத்தை நமக்கு படம்பிடித்துக் காட்டும். அதிலிருந்து வாழ்வின் பிரச்சினைகளை எதிர்கொள்ளவும், பிரச்சினைகளே வராமலும் நாம் தப்பித்துக்கொள்ளலாம். அமைதி அனைத்தையும் சாதிக்கும். சாதியுங்கள்.
மனதில் கேட்க…
1. பிரச்சினைகள் வரும்போது அமைதியாக இருக்கிறேனா?அல்லது கத்துகிறேனா?
2. சத்தம்போடாமல் அமைதியாக இருந்து என் வாழ்வில் அனைத்தையும் சாதித்து நான் காட்டலாமா?
மனதில் பதிக்க…
அமைதி ஏற்படுத்துவோர் பேறுபெற்றோர்; ஏனெனில் அவர்கள் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவர். (மத் 5:9)
~ அருட்பணி. பிரான்சிஸ் கிறிஸ்துராஜா