அமல உற்பவ அன்னை விழா
நமது கத்தோலிக்க மறைக்கல்வி பாவத்தை இரண்டு வகைகளாகப் பிரிக்கிறது. பிறப்பு வழிப் பாவம், செயல் வழிப் பாவம். கடவுள் இந்த உலகத்தைப் படைத்து அனைத்தும் நல்லதென இருப்பதாகக் கண்டார். படைப்பின் சிகரமாக மனிதர்களைப் படைக்கிறார். ஆனால், நமது முதல் பெற்றோர் கடவுளின் கட்டளையை மீறி, பாவம் செய்து, தாங்கள் பெற்றுக்கொண்ட அருள்வாழ்வை இழந்து விடுகிறார்கள். இதுதான் உலகத்தில் துன்பத்தைக் கொண்டு வந்ததாக, நாம் நம்புகிறோம்.
பிறக்கக்கூடிய குழந்தைகள் அனைத்துமே பிறப்புவழிப்பாவத்தோடு தான் பிறக்கிறார்கள். இதுதான் பிறப்பு வழிப் பாவம். தந்தையாகிய கடவுள், தனது மகன் பிறப்பதற்கு அன்னை மரியாளைத் தேர்ந்து கொண்டார். எனவே, மரியாளுக்கு மிகுதியான அருளைப்பொழிந்து மாசற்ற நிலையில், பிறப்பு வழிப்பாவம் அவரைத் தீண்டாத வகையில் காத்துக்கொண்டார். மீட்பரின் தாயாக கடவுள் அவரைத் தேர்ந்து கொண்டதால், மீட்பரின் பேறுபலன்கள் அவருக்கு முன்பே வழங்கப்பட்டது. இதனை நாம் விழாவாகக் கொண்டாடி மகிழ்கிறோம்.
அன்னை மரியாள் எவ்வாறு தனது உடலால், உள்ளத்தால், ஆன்மாவால் தன்னை புனிதமானவராகக் காத்துக்கொண்டாரோ, அதேபோல நமது வாழ்வும் புனிதத்தன்மை மிகுந்த வாழ்வாக அமைய ஆண்டவரிடம் மன்றாடுவோம்.
~ அருட்பணி. ஜெ. தாமஸ் ரோஜர்
அன்னை மரியின் அமல உற்பவம் !
லூர்து நகரில் பெர்னதத்துக்குக் காட்சி தந்தபோது, அன்னை மரியா தன்னைப் பற்றிச் சொன்னது: நாமே அமல உற்பவம். பெர்னதத் பங்குத் தந்தையிடம் சென்று தான் கண்ட காட்சிகளையெல்லாம் சொன்னபோது நம்பாத பங்குத் தந்தை, நாமே அமல உற்பவம் என்று அன்னை சொன்னதாக பெர்னதத் சொன்னபோதுதான் அந்தக் காட்சிகள் உண்மையானவை என்று நம்பினார். அன்னை மரியே தன்னைப் பற்றி வெளிப்படுத்திய இந்த இறையியல் உண்மையைத் திருச்சபையின் தொடக்க காலத்திலிருந்தே கிறித்தவர்கள் நம்பி ஏற்றுக்கொண்டுள்ளனர்.
கடவுளின் தாயாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மரியாவை இறைவன் தாயின் கருவிலேயே தூய்மை நிறைந்தவராக உருவாக்கினார் என்பதே இந்த விசுவாச சத்தியத்தின் பொருள். நாம் மாசற்றோராகவும், தூயோரகவும் அவர் திருமுன் நிற்க வேண்டுமென்று உலகம் தோன்றுமுன்பே கடவுள் நம்மைக் கிறிஸ்துவுக்குள் தேர்ந்துகொண்டார் (எபே 1:4) என்று இறைவார்த்தை கூறுகிறது. உலகம் உருவாகுமுன்பே கடவுள் நம் ஒவ்வொருவரையும் தேர்ந்துகொண்டாரென்பது உண்மையென்றால், நம் அனைவருக்கும் மாதிரியாக அன்னை மரியாவையும் உலகம் உருவாகும் முன்பே தூயவராக, சென்ம மாசற்றவராக, அமல உற்பவியாக இறைவன் தேர்ந்தெடுத்தார் என்பதில் எந்த வியப்பும், அதை நம்புவதில் எந்தத் தயக்கமும் இருக்க முடியாதல்லவா!
மன்றாடுவோம்: தூய்மையின் உறைவிடமே இறைவா, உமது திருமுன் தூயோராகவும், மாசற்றவராகவும் விளங்க எங்கள் அனைவரையும் நீர் தேர்ந்தகொண்டீரெ. உம்மைப் போற்றுகிறோம். அதற்கு முன்னோடியாக அன்னை மரியாவைத் தாயின் வயிற்றிலேயே மாசற்றவராகத் தேர்ந்துகொண்டீரெ. அதற்காக உம்மை வாழ்த்துகிறோம். நாங்கள் தூயவராக என்றும் வாழ எங்களுக்கு அருள் தந்தருளும். உமக்கே புகழ், உமக்கே நன்றி, உமக்கே மாட்சி, ஆமென்.
~ அருள்தந்தை குமார்ராஜா